தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தஞ்சை கீழவாசல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு, வாரிசு ( உதயநிதி ஸ்டாலின்) விளையாட்டுத் துறையைச் சரியாகக் கொடுத்துள்ளனர். விளையாட்டுத் தனமான அமைச்சருக்கு, விளையாட்டுத் துறையைத்தான் கொடுக்க வேண்டும். அவர் பிரதமர் மோடியை 29 பைசா என்று கூறுகிறார். நீங்கள் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அடுத்த தலைமுறையை வீணாக்கிக் கொண்டிருப்பவனை வைத்து சினிமா தயாரிக்கிறீர்கள். எனவே, உதயநிதியை டிரக் (Drug) உதயநிதி என்று தான் சொல்ல வேண்டும்.
பிரதமர் மோடி 29 பைசா என்று நீங்கள் கேவலப்படுத்தினால், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் நாங்கள் பேர் சொல்ல முடியும். அரசியல் விமர்சனங்களைத் தனிப்பட்ட நபர்கள் சார்ந்ததாக அல்லாமல் குறிப்பிட்ட பிரச்சனைகளைச் சார்ந்ததாக முன்வைக்க நாங்கள் விரும்புகிறோம். ஜனநாயகத்தில் என்றைக்கு வாரிசு அரசியல் வருகிறதோ, அங்கு உழைக்கின்ற தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும் என்கிற இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களும், அரசியலில் உயர் இடத்திற்கு வர வேண்டும் என்று பேசுகிற சமூக நீதியை நாங்கள் பின்பற்றுகிறோம். சமூகநீதியைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு (திமுக) தகுதி இல்லை. சமூகநீதியைப் பின்பற்றிக்கொண்டு அதை அமல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கேப்டன் இல்லாத கப்பல் திசை தெரியாமல் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருக்கும். கரை சேருமா? ஆனால், நம்முடைய கேப்டன் பிரதமர் மோடி, கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து, பலத்தோடு கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
2024 முதல் அடுத்த 5 வருடம் கப்பல் எங்கெங்கு நிற்க வேண்டும், கப்பலில் உள்ளவர்கள் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தோடு கேப்டன் நரேந்திர மோடி இருக்கிறார். அவரை கேப்டனாக வைத்துள்ள கப்பல் (பாஜக) ஒழுங்காகப் போகும். பாஜக தமிழகத்தில் வளர்ந்திருக்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் ஆழமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி காலூன்றத் துவங்கிவிட்டது” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரச்சாரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் எம்எல்ஏ, பாஜக மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், பாஜக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'மு.க.ஸ்டாலினின் பிரதமர் கனவு நிறைவேறாது' - எடப்பாடி பழனிசாமி சூசகப் பேச்சு - Lok Sabha Election 2024