தஞ்சாவூர்: கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து திமுக ஓட்டுக்களை அறுவடை செய்தது. இந்த தேர்தலிலும் அந்த அறுவடையை திரும்ப செய்ய முடியுமா என்ற முயற்சியில் தான் 29 பைசா கதை வந்துள்ளது. பிரதமரை 29 பைசா என்று பேசுவேன் என்று கூறினால், நாங்கள் டிரக் உதயநிதி என்று கூறுவோம் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினுடன் இணைந்து, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கும்பகோணம் இராமசாமி கோயில் அருகேயுள்ள தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் மகளிரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதை மகளிரணி தலைவியாக வரவேற்கிறேன். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எத்தனை பேர் வென்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளை போலவே நாடாளுமன்றம் சென்று பென்ஜை தான் தேய்பார்கள்.
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தியாவுக்கே தான் தான் வழிக்காட்ட போவதாக பேசி வருகிறார். தமிழ்நாட்டை தாண்டி செல்வாக்கு இல்லாத முதலமைச்சர் இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக கூறுவது நகைப்புக்குரியது. கற்பனை உலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்கிறார். தமிழகத்தில் பாஜக எங்களுக்கு போட்டி இல்லை என்று கூறி விட்டு, ஒவ்வொரு நாளும் பாஜகவை வைத்து திமுக அரசியல் செய்துக்கொண்டு இருக்கிறது.
காவிரி பிரச்சனையில், மக்களை ஏமாற்றும் கூட்டணியாக திமுக, காங்கிரஸ் தமிழகத்தில் உள்ளது. நீங்கள் கூட்டணியில் இருந்த போது வந்த நிதியை விட, கடந்த 10 ஆண்டுகளில், அதிகளவில் நிதி வந்துள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
ஆன்மீக நகரான கும்பகோணத்தில் சுற்றுலாத்துறையை மூலம் மேம்படுத்த தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி, வாரணாசியை ஆன்மீக நகரமாக, சுற்றுலா நகரமாக மாற்றி அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக மாற்றியுள்ளார். டெல்டாக்காரன் என முதலமைச்சர் கூறும் நிலையில், டெல்டா இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான தொலை நோக்கு இல்லை என்பது தான் வேதனை.
இளைஞர்களுக்கு திமுக அரசு கொடுத்திருப்பது போதை மட்டுமே. டாஸ்மாக் மூலம் இளைஞர்களை சீரழித்துள்ளது திமுக. கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து திமுக ஓட்டுக்களை அறுவடை செய்தது. இந்த தேர்தலிலும் அந்த அறுவடையை திரும்ப செய்ய முடியுமா என்ற முயற்சியில் தான் 29 பைசா கதை வந்துள்ளது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் உழைக்கின்ற மோடியை பார்த்து வாரிசு அரசியலில் வந்துள்ள உதயநிதி ஸ்டாலின் பேசவும், மோடியை விமர்சனம் செய்யவும் எந்த அருகதையும் கிடையாது. பிரதமரை 29 பைசா என கேவலமாக பேசுவேன் என கூறினால், டிரக் உதயநிதி என கூறுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; போராடிய இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Teachers Salary Cut