- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக நடத்தப்பட்ட சர்வேயில் 13 சதவீதம் வாக்குகளும் 5 எம்பி இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட 10 சதவீதம் வாக்குகள் உள்ள இரண்டு கட்சிகள் பாஜகவுடன் இணைந்துள்ளன. இதனால் இந்த கூட்டணியின் பலம் திமுக கூட்டணிக்கு மாற்று என்ற பலத்தை அடைந்துள்ளது. எனவே, இரட்டை இலக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை ஒட்டிய வாக்கு சதவீதம் இருக்கும்.
ரூ.2000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் கடத்தலை திமுக அயலக பிரிவு இணைச் செயலாளர் ஜாபர் சாதிக் செய்தார். மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் பேர்வழி திமுக நிர்வாகியாக இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். அது குறித்து விவாதிக்கப்படவில்லை.
திமுகவினர் அடிப்படை சித்தாந்தமே கட்டுக் கதைகளையும், பொய்களையும் கூறுவது தான். ஆரியவாதத்திற்கு சரியான இடம் குப்பைத் தொட்டியே என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். குஜராத் கடற்கரை பகுதிக்கு 60 கிலோ மீட்டர் உள்ளே ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய போதைப் பொருளைக் குஜராத் போலீஸ் கடமை தவறாமல் பிடித்துள்ளது.
போதைப் பொருள் குஜராத் மாநிலத்தில் இருந்து வரவில்லை. ஆப்கானிஸ்தானத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள நபருக்குக் கொடுக்க கொண்டுவரப்பட்டதைக் குஜராத் போலீஸ் கைப்பற்றி உள்ளனர். திமுகவில் ஆர்.எஸ்.பாரதி போன்று உள்ளவர்கள் பேசுவதை நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயணம் செல்வதைத் தவிர வேறு எதையும் சரியாகச் செய்வதில்லை. தமிழ்நாட்டில் பேராவூரணியில் 800 கிலோவும், திண்டுக்கல்லில் 450 கிலோவும் கஞ்சா பிடிபட்டுள்ளது.
ஜாபர் சாதிக் 2017 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு 38 கிலோ கேட்டமைன் கடத்தலில் கைதானவர். அவருக்கு, கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பு கொடுத்தது, முதலமைச்சரின் பொறுப்பற்ற செயல் இல்லையா? முதலமைச்சரின் தகப்பனார் கருணாநிதி 1937 முதல் 1970 வரை 33 ஆண்டுகள் குடி என்றால் என்னவென்று தெரியாத தமிழர்களைக் குடிக்க வைத்தவர்.
அதற்கு முன்பு தமிழ்நாட்டில் மது முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. மதுவிலக்கை ரத்து செய்து தமிழர்களைக் குடிக்க வைத்தது கருணாநிதி குடும்பம். அதனை அதிமுக தொடர்ந்ததால் அவர்களும் குற்றவாளிகள்தான். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வந்தால் அந்த பையில் என்ன பொட்டலம் வைத்திருக்கின்றனர் என பெற்றோர்கள் தேடும் அளவிற்குத் தமிழகத்தை ஸ்டாலின் நிர்வாகம் சீரழித்து விட்டது.
முதலமைச்சர் வார்த்தைகளை யோசித்துப் பயன்படுத்த வேண்டும். அவர் மத்திய அரசிடம் மோத வேண்டாம் என கூறியுள்ளார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகராவின் மகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில துணை முதல்வர் ஏற்கனவே ஒன்றை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதாரங்களின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் முடியட்டும், டெல்லி மதுபான வழக்கின் கைதுபோல திமுகவிலும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தில் கைதாவார்கள். எனவே முதலமைச்சர் அநாவசியமாக மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பினால் எல்லா விதத்திலும் உங்களை தண்டிக்கின்ற உரிமை பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைக்கும்.
மத்திய அரசு எங்கே சர்வாதிகார ஆட்சி நடத்தினால் எப்படி அரசாங்கத்தைப் பேச முடியும். பேசும் அளவிற்கு உரிமை இருக்கிறது அல்லவா? அதிலிருந்து இது சர்வாதிகார அரசு இல்லை என்பது தெரிகிறது. ஏனென்றால் நெருக்கடி நிலையின் போது நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள்.
உங்களின் தகப்பனார் ஆட்சி நெருக்கடி நிலையின் போது ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்பொழுது காவல் நிலையத்தில் என்ன ட்ரீட்மென்ட் கிடைத்தது. பாஜக அரசு உங்களை டிஸ்மிஸ் செய்து விட்டதா? நாங்கள் எதுவும் டிஸ்மிஸ் செய்யவில்லையே? அப்புறம் எப்படி சர்வாதிகார ஆட்சி என கூற முடியும்?
உங்கள் அமைச்சரவை முழுவதும் ஊழல் குற்றம் செய்து ஒன்று ஜெயிலில் இருக்கின்றனர் அல்லது பெயிலில் இருக்கின்றனர். செந்தில் பாலாஜி ஜெயிலிலும், பொன்முடி பெயிலிலும் இருக்கின்றனர். பொன்முடியின் தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது அவருடைய வழக்கிற்குத் தடை விதிக்கவில்லை.
இறுதித் தீர்ப்பு வரட்டும், குறைந்தது ஒரு டஜன் திமுக மந்திரிகள் சிறைக்குப் போவார்கள் எல்லாருக்கும் எதிராகவும் ஆதாரங்கள் உள்ளது. ஆளுநரை அவதூறு பேசுவது என்பது திமுகவிற்கு இன்று நேற்றைய பழக்கமல்ல. மரபணுவே அதுதான். அவர்களின் இழிந்த மனநிலை ஆளுநருக்கு விரோதமானதாக இருக்கிறது.
தமிழகத்தில் மழை வெள்ளம் வந்த மறுநாள் அமைச்சரவையின் மூத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னைக்கு வந்தார். ஒரு அரசாங்கத்தில் அனைத்திற்கும் பிரதமர் வர வேண்டுமா? தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பொழுது நிதி அமைச்சர் வருகை தந்தார்.
ஆனால், தமிழ்நாட்டிற்குள் உள்ள வேங்கைவயலில் பட்டியல் சமுதாய மக்கள் உபயோகப்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனைக்கு முதலமைச்சர் சென்றாரா? அல்லது அந்த ஊர் அமைச்சர்கள் ரகுபதி அல்லது மெய்ய நாதன் சென்றார்களா? இதுதான் சமூக நீதியா? பட்டியல் சமுதாய மக்கள் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் மலம் கலந்த வரை இதுவரை யார்? என்பதைக் கண்டுபிடிக்க இயலாத அரசாங்கம். நீங்கள் மத்திய அரசு பற்றியும் பிரதமரைப் பற்றியும் பேசலாமா? பிரதமர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தால் வலிக்கிறதா? சீட்டு போய்விடும் என பயந்து பேசுகிறீர்களா?
1967 இல் ஆட்சிக்கு வந்த திமுகவிற்கு 2024 முடிவு. இது ஆரம்பம் 2026 இல் உண்மையான விளையாட்டில் திராவிட ஆட்சி முடிவுக்கு வரும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேலை நடைபெற்று வருகிறது. 2014 ஆம் ஆண்டு அனுமதி கொடுக்கப்பட்டதற்கு 2019ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் மருத்துவமனையை சிங்கிப்பட்டியில் அமைப்பதா? மதுரையில் வைப்பதா என சிங்கி அடித்தீர்கள். அதுவும் திராவிட அரசாங்கம் தான்.
இடத்தை முடிவு செய்ய 5 ஆண்டு எடுத்துக் கொண்டதுடன், ஜப்பான் நாட்டின் நிதி உதவி பெறுவதற்கு ஆவணங்களையும் அளிக்கவில்லை. தற்போது பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் ஒருவர் செங்கல் திருடனாக இருக்கிறார் அந்த ஒரு செங்கல் இல்லாவிட்டால் மற்ற வேலைகளை முடித்துவிட்டு கடைசியாக அந்த ஒரு செங்கல்லை உதயநிதியால் திருடப்பட்டது என மேலே வைத்து விடுவோம்.
பிரதமர் மந்திரி சபையில் இருப்பது போல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ஸ்டாலின் மந்திரி சபையில் இருக்கிறதா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏன் ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரைப் போடக்கூடாது. சமூக நீதிக்கு ஸ்டாலின் விரோதி. மோடியின் அரசாங்கத்தில் 17 அமைச்சர்கள் இருக்கின்றனர் திமுக அமைச்சரவையில் எத்தனை பேர், என்ன இலாகாவில் உள்ளனர்.
சமூக நீதிக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றீர்கள். பெண்களின் நலனுக்காக திமுக என்ன செய்துள்ளது. பட்டியல் இன மக்கள் பாதிக்கப்பட்ட பொழுது திருநெல்வேலிக்குச் செல்லாமலும் நாங்குநேரிக்கு செல்லாமலும் இருந்தீர்கள்.
நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி விலக்கு கொடுக்க முடியும். 2013 ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பொழுது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மாணவர்களைத் தயார் செய்ய ஓராண்டு விலக்கு வேண்டும் என கேட்டார். அந்த அனுமதி வழங்கப்பட்டது.
இரண்டாம் ஆண்டு விலக்கு கேட்ட பொழுது உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது என கூறியது. ஜிப்மரில் , அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களைச் சேர்க்க முடியுமா?
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 15 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களும் தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாநில மருத்துவக் கல்லூரிகளிலும் சேரலாம். இதற்கு என்ன தேர்வு வைப்பீர்கள். ஒவ்வொரு கல்லூரியில் சேரவும் தனியாகத் தேர்வினை எழுத வேண்டுமா என்றால் முடியாது.
தற்போது ப.சிதம்பரம் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவியிடம் நீட் குறித்து சட்ட உபதேசம் செய்யுங்கள் என கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம் தான். நீட் தேவையில்லை என சட்டம் கொண்டுவர வேண்டுமென வற்புறுத்தினார்.
பா.சிதம்பரத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சட்ட அறிவு கொஞ்சம் இருக்கிறது என எடுத்துக் கொள்ள முடியும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் வந்த ஒரு சட்டத்தை ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு வேண்டுமென எப்படிக் கேட்க முடியும். சிதம்பரத்திற்கும் ஸ்டாலினுக்கும் சட்ட அறிவே கிடையாது.
நீட் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அமலுக்கு வந்துள்ள சட்டம் என்பதால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு என்பது செய்ய முடியாது. திமுக மந்திரிகள் எல்லாம் ஊழல் செய்வதற்கு விலக்கு வேண்டும். இதற்கு மோடி கேரண்டி கொடுப்பாரா? என கேட்டால் செய்ய முடியுமா? அதுபோல்தான் இதுவும்.
நாட்டிற்கு எதிராக மாணவர்கள் யாரும் பேசவில்லை. திமுகவும் காங்கிரசும் தங்களின் பெட்டியை நிரப்பிக் கொள்வதற்காகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் துணையாக கேட்கின்றனர். முட்டாள்கள் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பார்கள் மாணவர்கள் நலன் விரும்புபவர்கள் கேட்க மாட்டார்கள்"என்று பேசினார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சியோ மாநில தலைவர் அண்ணாமலையோ என்ன செய்துள்ளது என்பதை ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையைப் பார்த்தால் தெரிந்துவிடும். தமிழ்நாட்டில் மூன்றாவது சக்தியாக அதிமுக தள்ளப்பட்டு இருக்கிறது என்ற செய்தி வரும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி பேசியது அனைத்தையும் வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டியது இருக்கும்.
அரசியல் அறிவு இழந்தும் மனநிலை தவறியும், மக்களின் மனநிலை தெரியாமலும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் மனம் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு திமுக ஒரு தீய சக்தி அதற்கு எதிராக அதிமுக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
திமுக ஜெயிப்பதற்கு கள்ள உறவு வைத்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சோரம் போய்விட்டார் என மக்கள் கூறுகின்றனர். வெளியில் திமுகவை எதிர்த்துப் பேசுவதால் திமுகவின் எதிர் ஓட்டுகள் பிரியும். அவரின் அரசியல் குறித்து மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் ரோடு ஷோ குறித்து நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடியார் கள்ள உறவிலும், வெறியிலும் பேசுகிறார். பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் மாநில அளவில் தமிழில் வெளியிடும் தேசிய அளவில் ஓரிரு நாட்களில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக வெளியிடப்படும்.
தமிழரின் கச்சத்தீவை மீட்போம் என்பதும் தேர்தல் வாக்குறுதி இருக்கிறது. கச்சத்தீவை அடமானம் வைத்த துரோகி திமுக செய்த குற்றத்தை நாங்கள் சரி செய்வோம். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கச்சத்தீவை மீட்பதற்காகவும், திமுக செய்த தவறை திருத்தவும் நடவடிக்கை எடுப்போம்.
முதலமைச்சர் ஸ்டாலின் மனக்குழப்பத்தில் இருக்கிறாரோ? திமுக 50 ஆண்டுகளாக மீனவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்திக் கஷ்டப்படுத்தியது. 1974 ஜூன் மாசம் 19ஆம் தேதி மத்திய வெளிவருத்துறை செயலாளர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சபாநாயகம், உள்துறைச் செயலாளர் ஆம்புரோஸ் அமர்ந்து முடிவெடுத்துத் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் எதிர்ப்பு போராட்டம் நடத்தாமல் பார்த்துக் கொண்டதற்காக வெளியுறவுத் துறை செயலாளர் கருணாநிதிக்கு நன்றி கடிதமும் அனுப்பியுள்ளார். 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டார்களா? இல்லையா? மீனவர்கள் கொல்லப்பட்டதை ஏன் மறைக்கிறீர்கள்.
இந்தப் பத்தாண்டிலும் ஒரே ஒரு மீனவர் கொல்லப்பட்டார். அதுவும் மீன்பிடிப்பதற்காக நடக்கவில்லை இலங்கை கிரிக்கெட்டில் தோற்று விட்டதற்காக ஆத்திரத்தில் கொன்று விடுகிறார். ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? திமுக தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் செய்த சதி துரோகம்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் அக்டோபர் 15ஆம் தேதி இலங்கை 5 பேருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் முழுவதுமாக அழைத்து வந்தோம். நன்றி இல்லாமலும் தமிழர்கள் மீது அக்கறை இல்லாமலும் ஸ்டாலின் இதுபோன்ற பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொது மக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்!