கோயம்புத்தூர்: 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாகவும் ஒரே கட்டமாகவும் நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அண்ணாமலை பாலன் நகர் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்த நிலையில் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென தனது இடது ஆள்காட்டி விரலை துண்டித்துக்கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம் முள்ளிப்பாடி அடுத்த ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியை சார்ந்தவர் துரை ராமலிங்கம் என்பதும் கடந்த 2014ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த அவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்து வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக கோவைக்கு வந்து தங்கி பாஜக வேட்பாளரான அண்ணாமலைக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வந்த நிலையில், பிரச்சாரம் நிறைவு நேரத்தின் போது அண்ணாமலை தோற்று விடுவார் என அங்கிருந்த நண்பர் ஒருவர் கூறியதால் கோவத்தில் தன்னுடைய இடது ஆள்காட்டி விரலை துண்டித்துக்கொண்டதாக, துரை ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெற மாட்டார் என கூறியதற்கு கட்சி நிர்வாகி ஒருவர் விரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.