திருச்சி: பாஜகவின் மூத்த தலைவர் இல.கண்ணன் இல்லத் திருமண விழா திருச்சியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் விக்கிரவாண்டியில், பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர். மேலும், இந்த இடைத்தேர்தல் மூலமாக, ஆளுங்கட்சி மீதான மக்களின் அதிருப்தி வெளிப்பட வேண்டும் என்பதுதான் தங்களின் விருப்பம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
அப்போது, நடிகர் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "புதிதாக அரசியல் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு யாருக்கும் எதிரானதாக இல்லை என்பதை தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர் சேர்க்கை உணர்த்துகின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
நடிகர் விஜய் திமுக சார்ந்த அரசியலை கையில் எடுத்தால் எங்களுக்கு அது சந்தோசம் என அண்ணாமலை கருத்து#TVKVijay #Annamalai #bjp #neet #Trichy #pressmeet #etvbharattamilnadu pic.twitter.com/Tv7ajA3dib
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 4, 2024
மேலும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வெழுதிய மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர உள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் திமுக அரசு, நீட் தேர்வுக்கு கொண்டுவருதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்கள். அதேபோல், நீட் தேர்வுக்கு பின் அரசு மற்றும் தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் புள்ளி விவரங்களை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்டால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதை தவிர்த்துவிட்டு, பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் ஒன்றிய அரசு என்ற சொல் 2021ஆம் ஆண்டிற்கு முன் இருந்ததில்லை. நடிகர் விஜய்யும் திமுக சார்ந்த அரசியலை கையில் எடுப்பதாக இருந்தால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். இதனால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தமிழகத்தில் அனைவரும் திமுக சார்ந்த அரசியலை கையில் எடுத்தால், பாஜக சித்தாந்த ரீதியாக தனித்து ஆகிவிடும். தமிழகத்தில் எங்கள் அரசியல் எளிமையாகிவிடும். இது பாஜகவிற்கு மகிழ்ச்சியான ஒன்று. இதன் தாக்கம் 2026ஆம் ஆண்டு தேர்தலில் தெரியவரும். நடிகர் விஜயும் திமுக சார்ந்த கொள்கைகளை எடுத்தால், தமிழகத்தில் பாஜகவிற்கான ஆதரவு வளர்ந்து கொண்டுதான் இருக்கும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்" - அர்ஜுன் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு!