திருநெல்வேலி: நெல்லை சைக்கில் மேயர் என்று அழைக்கப்படும் மேயர் ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக பாஜகவைச் சேர்ந்த் பிரமுகர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், வழக்கை திசை திருப்ப அவர் முயற்சி செய்வதாகவும், பாஜக பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவைச் சேர்ந்த நெல்லை கவுன்சிலர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் நெல்லை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை சைக்கிள் மேயருக்கு வந்த சோதனை:
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக இருப்பவர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன். இவரது வீடு நெல்லை டவுன் வேணுவன குமாரகோயில் தெருவில் அமைந்துள்ளது. நெல்லை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, தனது பணிகளை சைக்கிளில் சென்று மேற்கொண்டு வந்த சூழலில், மேயராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மாநகராட்சி சார்பில் இனோவா கிரிஸ்டா கார் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் வீட்டிலிருந்து அலுவலகம் வருவதற்கு சைக்கிளையே பயன்படுத்தி வந்தார்.
அதன் காரணமாக நெல்லையின் "சைக்கிள் மேயர்" என ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது கார் விபத்துக்குள்ளானதால், மாற்று கார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக சைக்கிளில் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாஜக பிரமுகருடன் நெல்லை மேயர் மோதல்?
தற்போது, தினமும் அவரை வீட்டில் சென்று மாநகராட்சி மேயருக்காக வழங்கப்பட்ட காரில் ஓட்டுநர் அழைத்து வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் (டிச.6) மேயரை அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு கார் சென்றுள்ளது.
அப்போது வேணு குமார கோவில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் என்பவர் சாலையில் மேயர் கார் நின்ற காரணத்தால் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாகக் கூறி மேயர் கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அதனைக் கண்டு அங்கு திரண்ட மேயர் ஆதரவாளர்கள், வெங்கடேஷூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது மேயரை வெங்கடேஷ் ஒருமையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனால் மேயர் ஆதரவாளர்களுக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியதாகவும், பின்னர் மேயர் அளித்த தகவல்படி விரைந்து வந்த நெல்லை டவுன் காவல்துறையினர் வெங்கடேஷை சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் சென்று தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது மேயர் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாகவும், அதன் காரணமாக உடல் வலி ஏற்பட்டதாகவும் வெங்கடேஷ் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன் காரணமாக, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெங்கடேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல்:
இந்த நிலையில், இருதரப்பு புகாரையும் பெற்ற நெல்லை டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, நேற்று (டிச.7) நெல்லை மேயருக்கு ஆதரவாக மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 28 பேர் நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமாரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "நெல்லை மாநகராட்சி மேயரையும், அவரது உதவியாளர், ஓட்டுநர் ஆகியோரையும் அச்சுறுத்தும் வகையில் பாஜகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். அவர்மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதியான மேயர் ராமகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
வழக்கை திசை திருப்ப முயற்சி:
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் ரசூல் மைதீன், "திருநெல்வேலி மேயர் எளிமையாக மக்கள் பணியாற்றக் கூடிய மக்கள் சேவகர். சிறப்பாக பணியாற்றக் கூரிய மேயரை அச்சுறுத்தும் நோக்கத்தோடு, பாஜகவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த வழக்கை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக தன்னை தாக்கியதாக அவர் புகார் அளித்துள்ளார். எனவே, பாஜக பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம் எனவும், எளிமையாகப் பணி செய்து வரும் மேயருக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தார்.
தற்போது, நெல்லை மேயர் தாக்கியதாகக் கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர், பாஜக கட்சி பிரமுகரா இருப்பதால், பாஜக நிர்வாகிக்கும் திமுக மேயருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட கூறப்படும் இந்த மோதல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.