திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசேவ். நாட்றம்பள்ளி 14வது வார்டு கவுன்சிலராக பணியாற்றி வரும் இவர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட பாஜக சின்னம் பொருந்திய பதாகைகளை, திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதிக்கு தன் காரில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடிருந்த பறக்கும் படை அலுவலர் முருகதாஸ், பாஜக கவுன்சிலர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் முருகதாஸ் குருசேவிடம், உள்ளே இருந்த பதாகைகளுக்கு உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் காரணமாக, தேர்தல் அலுவலர் முருகதாஸ் பாஜக வார்டு கவுன்சிலர் குரு சேவ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் புகாரின் பேரில், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, உரிய ஆவணம் இன்றி சின்னங்கள் எடுத்துச் செல்வது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குருசேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை அவரை கைது செய்த போலீசார், அவரை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த பாஜக பிரமுகர்கள், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதாகைகளை எடுத்துச் சென்றது ஒரு குற்றமா, கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன கொலை குற்றவாளியா என கேள்வி எழுப்பினர். இதனால் காவல் நிலையப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, பதாகைகளுக்கு உரிய ஆவணம் கேட்டு விசாரணை செய்யப்பட்டதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின் பேசிய குருசேவ், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என்று எண்ணி திமுகவினர் செய்யும் சதி வேலைதான் இது என குற்றம் சாட்டினார்.