திருப்பத்தூர்: சில நாட்களுக்கு முன்பு திருப்பத்துாரைச் சேர்ந்த மோனிஷ்(19) என்பவரின் செல்போனுக்கு பீகார் மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில், அதிக சம்பளத்துடன் கூடிய வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனைக் கண்ட மோனிஷ் உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறிய மோசடி கும்பல், மோனிஷிடம் தனது கல்விச் சான்றிதழை வாட்சப் மூலம் அனுப்பும்படி கேட்டுள்ளனர். இதற்கு மோனிஷும் தனது சான்றிதழை வாட்சப் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு மோனிஷை தொடர்பு நபர்கள், அவருக்கு வேலை உறுதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர்.
மேலும், தனக்கு அதிக சம்பளம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைக் கூறி, தாங்கள் கேட்கும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் படி கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மோனிஷ், அவர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு மொத்தம் 6 லட்சத்து 53 ஆயிரத்து 583 ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வந்துவிடும் என்றும், அதன் பின்னர் நேரில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.
இதையும் படிங்க: தாளவாடி அருகே 5 வயது சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!
இதனையடுத்து, ஒரு மாத காலமாகியும், எந்த ஒரு பணி நியமன ஆணை மோனிஷின் முகவரிக்கு வரவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோனிஷ் இது குறித்து திருப்பத்துார் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த முகேஷ் குமார், ஜித்தேந்ர குமார், அமன்குமார் ஆகியோர் மோனிஷிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஜார்கென்ட் மாநிலம் ஆசாரிபாத் மாவட்டம், கோரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ஜார்கண்ட் விரைந்த திருப்பத்துார் சைபர் க்ரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்டு சிறையில் இருந்த மூன்று பேரையும் விசாரணைக்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வடிவேலு பாணியில் நாய்களுக்கு பிஸ்கட் போட்டு சைக்கிளை திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வைரல்!