சென்னை: சமீபத்தில் கர்நாடகா மாநிலம் முதலமைச்சர் இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது போல், நேற்று மீண்டும் பெங்களூரு காவல் கட்டுப்பாட்டறைக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அந்த மெயிலில் சென்னையில் இருக்கும் கோயில்களில் விரைவில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெங்களூர் காவல் துறையினர், உடனடியாக இந்த மெயில் முகவரி உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தையும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்து, அனைத்து விவரங்களையும் அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து சென்னை காவல் துறையினர், சைபர் கிரைம் போலீசார் உதவி உடன் இமெயில் வந்த ஐபி முகவரிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், சென்னையில் உள்ள கோயில்களுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால், உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து கோயில்களிலும் மோப்ப நாய் உதவிகளுடன் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கோயில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவும், அந்தந்த காவல் நிலைய எல்லையில் உள்ள கோயில்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர் வெடி குண்டு மிரட்டல்: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது, இதற்கிடையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில நாள்களாகவே தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரங்களில் இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது சாதாரணமான ஒன்றுதான் என்று சிலர் கூறினாலும், அன்மையில் பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட் பகுதியில் செயல்பட்டுவந்த ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் (NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் அச்சம் ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் கடந்த மாதம் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், இமெயில் ஐடியின் ஐபி முகவரியை இன்னும் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தல் என தாக்குதல்.. வதந்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை!