தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் விசைப்படகுகளுக்குத் தேவையான ஐஸ்கட்டிகளை, ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் உரிமையாளர்கள் வழங்கி வந்தனர்.
தற்போது மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், ஐஸ்கட்டிகளுக்கு கூடுதலாக பார் ஒன்றுக்கு ரூ.10 வழங்க வேண்டும் என ஐஸ்கட்டி உரிமையாளர்கள் விசைப்படகு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால், இந்த கோரிக்கையை விசைப்படகு உரிமையாளர்கள் ஏற்காததைத் தொடர்ந்து, நேற்று விசைப்படகுகளுக்குத் தேவையான ஐஸ்கட்டிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், இன்று விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 படகுகளும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீன்பிடித் தொழிலாளர்களும் வேலையை இழந்துள்ளனர். தற்போது மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்