சென்னை: சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் சாந்தகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாந்தகுமார், “நினைவஞ்சலியைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. எங்கள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் குமரி முதல் இமயம் வரை போராட்டங்கள் வெடிக்கும்.
இந்த வழக்கில் அமைச்சர் உட்பட யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படையை முதலில் ஒழிக்க வேண்டும். பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்ய வேண்டும். தமிழக அரசு இன்றைக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கூலிப்படை புரோக்கர் ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்