விருதுநகர்: ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், தனது மகள் இசக்கியை, 9 வருடங்களுக்கு முன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுரேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு கடந்த வருடம் இசக்கி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மகளை வீட்டுக்கு அழைத்து வந்த தந்தை, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 22ஆம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், காமராஜர் நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துள்ளார்.
இதனை அடுத்த நாள் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர்களை, 25ஆம் தேதி நடைபெறும் கர்பிணிகள் முகாமில் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இசக்கி 25ஆம் தேதி நடந்த முகாமுக்குச் சென்ற போது பணியில் இருந்த மருத்துவர் கிரிஜா, ஸ்கேன் அறிக்கையை பார்க்காமலேயே குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில், இசக்கியும் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 3 தினங்களாக உடலில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டதாகவும், இதை தாங்க முடியாத இசக்கி, தனது தாய் ராக்கம்மாளை அழைத்துக் கொண்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசேதனையில் குழந்தையின் அசைவு தெரியாததால், மீண்டும் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.
ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை இறந்து 3 நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தை வளர்ச்சி 38 வாரம் 3 நாட்கள் என்று உள்ளது. இந்த தகவலை தனியார் ஸ்கேன் நிறுவன ஊழியர் ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்துள்ளார்.
அங்கு முறையான பதில் கிடைக்காததால், கோபம் அடைந்த ராமகிருஷ்ணன் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மூலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர்.
பின்னர் இறந்த குழந்தையை வெளியே எடுக்க அவரச வாகனம் மூலம் இசக்கி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் முறையான விசாரணை நடத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.