மயிலாடுதுறை: மயிலாடுதுறை மையப்பகுதியில் மாவட்ட தலைமை அரசு பெரியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனை சாலையில் திமுக மற்றும் அதிமுக சார்பில் பதாகைகள் வைத்து ஐந்து ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ் ஶ்ரீதர் அறிவுறுத்தலின்படி, பேனர் வைத்து புதிதாக மருத்துவமனை எதிரே ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டது.
இதையறிந்த 7வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் மணிமேகலையின் கணவரும், அதே வார்டு செயலாளருமான மணிவண்ணன் என்பவர் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பேனரை கிழித்து சேதப்படுத்தி, பிடுங்கி சாலையோரமாக உள்ள சாக்கடையில் தூக்கி எரிந்து மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறி உள்ளனர். தற்போது, மணிவண்ணனின் செயலால் மன உளைச்சலில் இருந்த கார்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில், ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க திமுகவைச் சேர்ந்தவரே எதிர்ப்பு தெரிவித்த செயல் கட்சிக்குள்ளேயே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் சத்தியசீலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பகுதியில் மொத்தமாக 4 ஆட்டோக்கள் தான் ஓட வேண்டும் என எண்ணி அராஜகம் செய்கின்றனர். நாங்கள் 25 வருடமாக இங்கு தான் ஆட்டோ ஓட்டுகிறோம்.
நாங்கள் திமுகவின் தொழிற்சங்கத்தில் இருக்கிறோம். இந்த போர்டை திமுக 7வது வார்டு கவுன்சிலர் கணவர் கிழித்து சாக்கடையில் எறிந்து மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். எதற்கு கிழிக்கின்றீர்கள்? என கேட்டால் என்னிடம் சொல்லாமல் போர்டை செய்து வீட்டீர்கள் இது என்னோட கண்ட்ரோலில் இருக்கும் பகுதி என கூறி விட்டுச் சென்றார். இதுகுறித்து நாங்கள் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி, "நான் திமுக தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். 4 பேருக்கும் மட்டும் ஆட்டோ ஓட அனுமதி கொடுத்துள்ளார்கள். எங்களால் முடியவில்லை. எனது குடும்பம் கஷ்டப்படுகிறது. எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் வைத்திருந்த போர்டை கிழித்து விட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - எழும்பூர் நீதிமன்றம் - Armstorng Murder case