ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சிறையில் 50க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் பெண் அதிகாரியாக பணியாற்றி வருபவர் வைஜெயந்தி.
இவர் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்படும் அரிசி, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட உணவு மற்றும் மளிகை பொருட்களை வெளியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனையடுத்து சேலம் சிறை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆத்தூர் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அதேபோல சேலம் மத்திய சிறை சூப்பரின்டென்ட் வினோத் ஆத்தூர் சிறைக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, சிறையில் உள்ள மளிகை பொருட்களை வெளியில் செயல்படும் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது .இது தொடர்பாக சிறை அதிகாரி வைஜயந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில், சேலம் மத்திய சிறை சூப்பரின்டென்ட் வினோத் மற்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை அறிக்கையை, சென்னையில் உள்ள சிறைகளுக்கான டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தற்போது ஆத்தூர் சிறை பெண் அதிகாரி வைஜெயந்தி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து வெளிநபர்கள் நடத்தும் மளிகை கடைகளுக்கு விற்பனை செய்த புகாரில் பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சிறை மற்றும் காவல் துறை வட்டாரங்களில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பெண் காவலரை பிளேடால் வெட்டிய வாலிபர்கள்..சென்னையில் துணிகரம்!