கோயம்புத்தூர்: நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுடன் இணைந்து மூவர்ண பலூன்களை வானத்தில் பறக்க விட்டார்.
தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 83 பேருக்கு, அரசு அலுவலர்கள் 140 பேருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், மொழி போராட்ட தியாகிகள் என பலருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர ஆயுதப்படை போலீசார், வாகா எல்லையில் நடைபெறுவது போன்ற அணிவகுப்பை மேற்கொண்டனர். முதல்முறையாக கோவை மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகா எல்லை அணி வகுப்பு: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்ட போது, இரு நாடுகளுக்குமான எல்லை பகுதியாக வாகா கிராமமும், அட்டாரி கிராமமும் நிர்ணயிக்கப்பட்டது. வாகா பகுதி பாகிஸ்தானுக்குள்ளும், அட்டாரி இந்தியாவுள்ளும் உள்ள பகுதிகள். இந்த இரண்டு பகுதிகள் சந்திக்கும் இடமே வாகா - அட்டாரி எல்லை என்று அழைக்கப்படுகிறது. 1959 முதல் தினந்தோறும் இங்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும்.
தினமும் சூரிய அஸ்தமனத்துக்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக இந்த அணிவகுப்பு துவங்கும். இங்கு இரு நாட்டின் எல்லைக் கதவுகளும் அமைந்துள்ள நிலையில், அந்தந்த நாட்டு ராணுவ வீரர்கள் அவர்களது கதவைத் திறந்து அணிவகுப்பை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இதில் 52 பேர் பங்கேற்றனர்.
இது குறித்து விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும், அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.
அதனை பெரும்பாலானோர் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் மட்டுமே பார்த்திருப்பார்கள். அதேபோன்று நிகழ்ச்சியை கோவையில் மாநகர போலீசார் செய்து காட்டியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து காவல்துறை சார்பில் இது போன்ற அணிவகுப்பு இருக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி மவுத் ஹார்ன் வாசித்து அசத்திய கோயில் யானை! - independence day celebration 2024