சென்னை: கிருஷ்ணகிரியில் குழந்தையைக் கடத்த முயன்றதாக பரவிய போலி வீடியோவை நம்பி, அசாமைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலியான வீடியோவை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு குழந்தைகளைக் கடத்த வடமாநிலத்திலிருந்து சுமார் 400 பேர் சேலத்திற்கு வந்துள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வட மாநிலத் தொழிலாளர்கள் மீது ஒருவிதமான பயம் ஏற்பட்டது. சில மாவட்டங்களில் தொழிலாளர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
குழந்தை கடத்தப்பட்டதாக வெளியாகும் போலி வீடியோவால், தொழில் நிமித்தமாக தமிழகம் வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கே திரும்பிச் சென்ற சம்பவங்களும் நடந்தது. மனித உரிமை ஆணையமும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு: பொதுவாக குழந்தைகள் கடத்தப்பட்டால் உடனடியாக "குழந்தை காணவில்லை" என காவல்துறை வழக்குப்பதிவு செய்யும், விசாரணைக்குப் பின் "குழந்தை கடத்தல்" வழக்காக மாற்றம் செய்யப்படும். நீதிமன்ற உத்தரவின்படி, 2019ஆம் ஆண்டு தமிழக அரசு, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தியது.
இந்த பிரிவின் கீழ் 2 வருடங்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், குழந்தையை இழந்தவரின் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குழந்தை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல்நிலையம் தொடங்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் காவல்துறையினரே கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
தண்டனை உறுதி: போலி வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராயாமல் மற்றவருக்கு அனுப்பினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 63-இன் படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகள் கடத்தப்பட்டதாக பரப்பப்படும் போலியான வீடியோக்களால், யாராவது காயம் ஏற்படும் வகையில் தாக்கப்பட்டால், தாக்கியவர்களுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 352-இன் படி 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
சாதாரண காயங்கள் இல்லாமல், உயிரிழப்பு ஏற்படும் வகையில் தாக்கினால், இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் படி கொலை வழக்கும், கடுமையான காயத்தை ஏற்படுத்தினால் பிரிவு 307-இன் படி கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்படும் என்பதால், போலி வீடியோக்களை நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விட வேண்டாம் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் வலுக்கும் போராட்டம்: சட்டசபையை நோக்கி மாணவர்கள் படையெடுப்பு..