தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் பரிசுத்த பவுலின் ஆலயத்தில் 167வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை நிகழ்வு நேற்று (ஜன.27) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் சமையல் ஏற்பாடு செய்து அசன விருந்து நடைபெற்றது
அதன்படி 4 டன் அரிசி, 2 டன் பருப்பு, 6 டன் காய்கறி, 500 கிலோ பட்டாணி கொண்டு பிரம்மாண்டமான முறையில் மிகப்பெரிய அண்டாவில் வகைவகையான சாப்பாடுகள் தயார் செய்யப்பட்டது. சமைக்கப்பட்ட இந்த சாப்பாட்டினை அசனப் பண்டிகைக்கு வந்திருந்த அனைவருக்கும் பந்தியில் பரிமாறப்பட்டது. மேலும் இங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருந்த அரிசி சாப்பாட்டினை தேவாலயத்தில் இருந்தவர்கள் மண்வெட்டியை கொண்டு பரிமாறியது அனைவரையும் கவனத்தை ஈர்த்தது.
ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அங்கிருந்த ஆலய நிர்வாகிகள் சாப்பாட்டினை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். அதோடு மட்டுமல்லது ஆலயத்திற்கு வந்திருந்தவர்கள் அவர்களின் வீடுகளுக்கும் தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் உணவை வாங்கி சென்றனர். இந்த பிரதிஷ்டை நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அறுவடை நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்! மீன் வளர்போர் இடையூறா? பொதுப் பணி அதிகாரிகள் அலட்சியம் - விவசாயிகள் குற்றச்சாட்டு