திருநெல்வேலி: நாங்குநேரி தென்னிமலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருணகிரி (27). இவர் கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து, கோயம்புத்தூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். அதேநேரம், வேலை பார்த்துக் கொண்டே உயர் பதவிக்கான பிற அரசு போட்டி தேர்வுகளையும் அருணகிரி எழுதி வந்துள்ளார்.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதுவதற்காக அருணகிரி விடுமுறையில் நேற்று முன்தினம் சொந்த ஊரான தென்னிமலைக்கு வந்துள்ளார். தொடர்ந்து, நேற்று காலை தேர்வுக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்த நேரத்தில் அருணகிரி திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அருணகிரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணகிரி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் அருணகிரி தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பணிச்சுமை அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து நாங்குநேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளைப் பார்க்கச் சென்ற பெற்றோர் கண்டெய்னர் லாரி விபத்தில் பரிதாப உயிரிழப்பு!