சென்னை: சென்னையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தொற்றா நோய்கள் பரவுவதை தடுப்பதற்காகவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிக்கவும் பொது சுகாதாரத்துறையின் சார்பில், மாவட்டந்தோறும் இணை இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கவுள்ள நிலையில், பருவமழையின் போது மக்களுக்கு வரக்கூடிய காய்ச்சல் உள்ளிட்ட தொற்றா நோய்கள் வராமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மழைக்கால மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் காய்ச்சிய நீரை பருக வேண்டும், வீடுகளை ஒட்டி மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல் வேண்டும், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தேங்கி இருக்கின்ற நீரை உலர்த்தி வைத்தல் வேண்டும், வீடுகளில் குடம் அல்லது தொட்டிகளில் பிடித்து வைக்கப்படும் நீரை துணி கொண்டு மூடி வைக்க வேண்டும், கொசு உற்பத்தியை பெருக்குவதை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் நாளை மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்கள் என்கின்ற வகையில், மொத்தம் 1000 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் மருத்துவ நலத் திட்டங்களை கண்காணிக்கவும், நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் இணை இயக்குநர்களை நியமனம் செய்துள்ளனர்.
வ.எண் | மாவட்டங்கள் | இணை இயக்குநர்கள் |
1 | ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி | விஜயலட்சுமி |
2 | பரமக்குடி, பூந்தமல்லி, ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு | கிருஷ்ணராஜ் |
3 | செய்யார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை | நாகராஜன் |
4 | கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், விழுப்புரம் | நிர்மல்ஜான் |
5 | காஞ்சிபுரம், கரூர், அறந்தாங்கி, கடலூர், திருச்சி | வினய்குமார் |
6 | கோவில்பட்டி, சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை | சண்முகசுந்தரம் |
7 | திண்டுக்கல், நாமக்கல், பழனி, தேனி, அரியலூர், பெரம்பலூர் | செந்தில்குமார் |
8 | ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நாகர்கோவில், திருநெல்வேலி | எம் .செந்தில்குமார் |
இவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் சுகாதாரத்திட்டங்களையும், பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் கண்காணிக்க உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்