திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் 54வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 2) நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். முன்னதாக, 2018 - 2023ஆம் கல்வி ஆண்டில் மருத்தவ படிப்பை முடித்த 154 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
பின் மேடையில் சிறப்புரையாற்றிய அப்பாவு, “இந்தியாவில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதிலும் அதற்கு உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். நீட் தேர்வின் பின்புலம் இந்த முறை நடந்த முறைகேட்டில் தெரியவந்துள்ளது. மேலும், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் விலைக்கு விற்கப்படுகிறது.
இந்த தேர்வை நடத்துவதற்கு தேவையில்லை. மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சீட் வழங்கலாம். அதன் மூலம் மட்டும்தான் நல்ல மருத்துவர்களை உருவாக்க முடியும். ஒன்றை மறந்து விடாதீர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கருணாநிதியின் முன்னோக்கு பார்வையால் 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.
இதிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டிற்கு 11,650 மருத்துவர்களை உருவாக்க முடியும். ஆனால், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவு. இதனால் நமது இந்த சிறப்புவாய்ந்த வாய்ப்பை தட்டிப் பறிக்கவே நீட் நடத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் மருத்துவ பரிணாம வளர்ச்சி பின்னோக்கி இழுக்கப்படுகிறது.
மேலும், இதற்காகதான் புதிய கல்விக் கொள்கையில் மக்கள்தொகை அடிப்படையில் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் உருவாகும் நிலையே இந்த கொள்கையின் அடிப்படையாகும். தற்போது தற்காலிகமாக இந்த புதிய கல்விக் கொள்கை நிறுத்திவைக்கப்பட்டாலும், இது அமலுக்கு வந்தால் தமிழகத்தில் 3,650 மாணவர்களின் மருத்துவப் படிப்பு பறிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண் தொழில்முனைவோருக்கான TN-RISE திட்டத்தை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!