திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் தேர்தல் பரப்புரையின் போது பேசிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “பிரதமர் மோடி அப்படி பேசி இருக்க வேண்டாம். தமிழ்நாடோ, தமிழ்நாட்டு மக்களோ வேறு இடங்களிலிருந்து கொள்ளையடிக்க வேண்டும் என்றோ, கொள்ளையடித்துக் கொண்டு வர வேண்டும் என்றோ, அதை பாதுகாக்கின்ற அரசாகவோ தமிழ்நாடு இல்லை.
தமிழகத்தில் உள்ள தொழில்கள், முதலீடுகள்தான் கொள்ளை அடிக்கப்பட்டு குஜராத்திற்குச் சென்று இருக்கின்றது. தூத்துக்குடி துறைமுகத்தில் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். தற்போது பருப்பு இறக்குமதி செய்யும் வாய்ப்பை தூத்துக்குடி துறைமுகத்திற்கு மறுக்கப்பட்டு, குஜராத் மாநிலம் அதானி துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொழில் வளம் தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரிலிருந்து தொழிற்சாலைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 22 முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கிடையாது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு கூட ஒரு ரூபாய் கூட கடன் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளுக்கு மாணவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் தள்ளுபடி செய்து பயன்பெற்ற 22 பேரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். வங்கிகள், தொழில்கள் கொள்ளையடித்து குஜராத்திற்குச் சென்று உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் படிப்பில் சிறந்தவர்கள். சமூக நீதியில் சிறப்பான அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மக்கள் கொள்ளை அடிப்பவர்கள் அல்ல. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதை பிரதமர் தவிர்க்க வேண்டும். ஆளுநருக்கு, அவரை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவராக அவருக்கு குல்லா அணிவித்து அவரது துணைவியாருக்கு பர்தா அணிவித்து அதை ஏற்றுக் கொள்வார் என்றால், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இதை செய்யக்கூடாது" என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வழக்கு குறித்து கேட்டபோது, "காவல்துறை எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்களிடம் சம்மன் அனுப்பி குற்றம் தொடர்பாக கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். அதுதான் கடமை. அதேபோன்று, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் எனக்கும் சம்மன் வந்தால் நானும் பதில் அளிப்பேன்.
என்ன தவறு நடந்தாலும் குற்றவாளிகளுக்கு இந்த அரசு துணை போனது இல்லை. எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கக்கூடிய இடத்தில் முதலமைச்சர் இருக்கிறார். நெல்லை கொடூர கொலை வழக்கில் உரிய தண்டனை குற்றவாளிகளுக்கு கிடைக்கும்.
மேலும், காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் மோதல் என்பது பிம்பம். டிக்கெட் எடுக்க மாட்டேன், நானும் அரசு ஊழியர் என்று அவர் சொல்லியிருக்கிறார். உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று அவர் பேசியிருக்கலாம். அவரின் பேச்சு சரியானது அல்ல, நல்லதல்ல. இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு; 2வது நாளாக தொடரும் சிபிசிஐடி விசாரணை! - Jayakumar Case Investigation