சென்னை: சென்னை மயிலாப்பூர் பாஸ்கரபுரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு காவலாளியாக நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் தாப்பா பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று, கணேஷ் தாப்பா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள அறையில் தங்கி இருந்த நிலையில், நள்ளிரவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, மின்சாரம் தாக்கி கணேஷ் தாப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, அவரை மீட்ட குடியிருப்புவாசிகள், அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், கணேஷ் தாப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர், இது குறித்த தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடியிருப்பு காவலாளி கணேஷ் தாப்பா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது தெரிந்தது. இந்நிலையில், அவர் தங்கி இருக்கும் அறை குடியிருப்புக்கான மின் கேபிள்கள் இருக்கும் அறை என்பதால், தற்செயலாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி தப்பாது.. திருட்டு பைக்குகளை காட்டிக்கொடுக்கும் கேமராக்கள்... சென்னை போலீஸ் அசத்தல்!