கடலூர்: நகராட்சியாக இருந்த கடலூர், கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த வாரம் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் பொதுத்துறையின் துணை செயலாளராக பணியாற்றி வந்த அனு ஐஏஎஸ், கடலூர் மாநகராட்சி ஆணையர் நியகிக்கபட்டார். இதனிடையே இன்று மாநகராட்சி ஆணையராக அனு பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் முன்னாள் ஆணையரான காந்திராஜ், தனது பொறுப்புகளை அனுவிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அவருக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் அனு கூறுகையில், "கடலூர் மாநகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடலூர் மாநகராட்சியைத் தூய்மையாக மாற்ற பாடுபடுவேன்.அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணிபுரிவேன். கடலூர் மாநகராட்சியை ஒரு சிறந்த மாநகராட்சியாக்குவதே எனது ஒரே நோக்கம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை" என தெரிவித்தார்.
யார் இந்த அனு ஐஏஎஸ்? புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள அனு, கடந்த 2017-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பயிற்சி கலெக்டராக பணிபுரிந்தார். அதன் பிறகு திண்டிவனம் சார் ஆட்சியராகவும், பொதுத்துறையின் துணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
கணவர் ஆட்சியர் - மனைவி மாநகராட்சி ஆணையர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
கடந்த 19ஆம் தேதி சிபி ஆதித்யா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவரது மனைவி அனு, கடலூர் மாநகராட்சியிலேயே, புதிய ஆணையாளராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். அதாவது கடலூரில் கணவர் ஆட்சியராகவும், மனைவி மாநகராட்சி ஆணையராகவும், ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவையில் மீண்டும் ஓர் பயங்கரம்.. பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய காதல் மன்னன் சிக்கியது எப்படி?