சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்க முயன்றதாக கூறி என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்,
பல்வேறு ரவுடிகள் திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும், தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல ரவுடியின் மனைவியும் வழக்கறிஞருமான மலர்கொடி, அவருக்கு உதவியதாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ்குமார், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான வட சென்னை அஞ்சலை, திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் ஹரிதரன், ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 16 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா உள்ளிட்ட நபர்களும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 ஆவதாக, ஒரு வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே உள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற வழக்கறிஞரைத் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சிவா மூலம் கொலைக் குற்றவாளிகளுக்கு பணம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வழக்கறிஞர் சிவா, சம்போ செந்தில் உடன் தொடர்பில் இருந்து வந்ததும், அவர் மூலம் இந்த பண பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிவாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை வழக்கறிஞர் சிவா உட்பட 5 வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ் அப் சேனில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: துப்பாக்கியுடன் சின்னத்திரை நடிகை சுஜிதா.. வனத்துறை நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!