வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று “என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின்போது பொதுமக்களிடைய பேசிய அண்ணாமலை, “வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் விளையும் இளவம்பாடி முள் கத்திரிக்காய்-க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது. இதன் காரணமாக, உலக அளவில் இளவம்பாடி முள் கத்திரிக்காய் புகழ் பெற்றுள்ளது.
இதேபோல, ஒடுக்கத்தூர் பகுதியில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் டன் கொய்யாப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கொய்யா பழத்திற்கு புவிசார் குறியீடு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் காரணமாக,
கொய்யா பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க பாஜக முயற்சி எடுக்கும்.
அழிவின் விழிம்புக்குச் சென்ற அணைக்கட்டு அருகே உள்ள நாக நதியை மீட்டு எடுத்தவர்கள் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள்தான். இதனை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். ஆயிரம் ஆண்டு பழமையான பள்ளி கொண்ட ரங்கநாதர் கோயிலில், அறநிலையத்துறை பணிகளை சரியாக செய்வதில்லை.
தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகளில் காமராஜர் செய்ததை, அதற்கு பின்பு வந்த எந்த முதல்வரும் செய்யவில்லை. 31 மாதத்தில் தமிழகத்தில் 31 லட்சம் பேர் தேர்வெழுதி, 10 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது.
திமுக சொன்னது 5 ஆண்டில் மூன்று லட்சம் பேருக்கு அரசு வேலை என, ஆனால் தற்போது வரை 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளது. குரூப் 1 தேர்வு எழுதியவர்களுக்கு இன்னும் முடிவு வரவில்லை. 2026இல் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தால், இதுவரை அரசு வேலைக்கு செல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “யாரெல்லாம் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை அமலாக்கத்துறை விடாது. தமிழ்நாட்டில் மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம்தான். பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக பரவலாக பேசப்படுகிறது. ஆனால், ஏன் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்? நான் ஏன் வேலூர் தொகுதியில் போட்டியிடக் கூடாது? நானும் வேலூர்காரன்தான்.
திமுக ஆர்.எஸ்.பாரதி போல் அமைச்சர் துரைமுருகன் தற்போது நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார். உப்பு சாப்பிட்டால் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கட்சியைk காப்பாற்றும் வேலையில் ஈடுபடட்டும். சீமான் உடைய கட்சி தற்போது மேகமாக கலைந்து கொண்டிருக்கிறது.
அதனால் அண்ணாமலையை வம்பு இழுத்தால் ஒரு இமேஜ் கிடைக்கும் என தமிழ்நாட்டில் ஒரு ஸ்டைல் தற்போது உள்ளது. எப்பொழுதுமே சீமான் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக் கூடிய மனிதன் நான். நாங்கள் பிரிவினைவாதம் பேசுபவர்கள் அல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 11 பேரும் தமிழ்நாட்டுக்காரர்கள்தான் விளையாட வேண்டும் என சொல்ல மாட்டேன்
தமிழ்நாட்டுக்காரர்களை அந்த அளவிற்கு தகுதியில் உருவாக்குவேன். தமிழ்நாட்டு இளைஞர்களை இந்தியா முழுவதும் இருக்கும் ஐபிஎல் அணிகளில் விளையாட வைப்பேன். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 100 பிளேயர்களை வேறு வேறு ஐபிஎல் டீமில் விளையாட வைப்பேன், அப்படித்தான் சொல்வேன். சீமான் போல, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னை அணியில் 11 பேர் இவர்கள்தான் விளையாட வேண்டும் என சொல்ல மாட்டேன்.
எனக்கும், சீமானுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னுடைய அரசியல் பாதை முற்றிலும் வேறு, அவருடைய அரசியல் பாதை முற்றிலும் வேறு. இரண்டையும் மக்கள் பார்க்கிறார்கள், மக்கள் முடிவெடுக்கட்டும், எந்த சித்தாந்தம் வேண்டும் என. பிரிவினைவாதம் வேண்டுமா அல்லது தேசியம் வேண்டுமா என்று மக்கள் முடிவு எடுக்கட்டும்.
நான் எம்பிஏ பைனான்ஸ் (MBA Finance) படித்தவன், 10 லட்சம் பேர் எழுதிய CAT exam இல் 99.4% எடுத்து தேர்ச்சி பெற்றேன். அமைச்சர் துரைமுருகனை விட எனக்கு நன்றாக பைனான்ஸ் தெரியும். எப்படி ஒரு அறிக்கையை படிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அமைச்சர் துரைமுருகன் படிக்காமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.