சென்னை: டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பாஜகவிற்கு பயந்து அதிமுக விட்டுக் கொடுத்ததால் தான் கோயம்புத்தூரில் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற முடிந்தது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில், மக்கள் பாஜக நரேந்திர மோடி ஆட்சி அமைக்கக் கூடாது என்று தான் வாக்களித்துள்ளார்கள்.
நியாயமாக நரேந்திர மோடியும், பாஜகவும் ஆட்சி அமைக்கக் கூடாது. தார்மீக அடிப்படையில் உண்மையான அரசியலை நரேந்திர மோடியிடம் இருந்து நாம் எதிர்பார்க்க முடியாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “400 இடத்தைப் பிடித்து வெற்றி பெறுவோம் என பாஜகவினர் தெரிவித்து வந்த நிலையில், 240 மட்டுமே பெற்றுள்ளனர். இது மோடி ஆட்சி கிடையாது, என்டிஏ ஆட்சி.
நரேந்திர மோடியின் மக்கள் விரோத செயல்பாடுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளோம். அதனால் தான் நரேந்திர மோடிக்கு எதிராக இந்த தீர்ப்பானது அமைந்துள்ளது. நாங்கள் மீண்டும் ஒரு சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். பங்குச்சந்தையின் ஊழலை எங்கள் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று தான் இந்தியா கூட்டணியின் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது. அது சம்பந்தமாக கூட்டத்தில் முடிவெடுப்பார்கள். கோயம்புத்தூரில் அதிமுகவின் வேலுமணி கூறியதையும், அதற்கான பாஜக அண்ணாமலையின் பதிலையும் பார்த்தேன்.
இந்த வார்த்தை போரானது ஒரு நாடகம். பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுகவும், வேலுமணியும் களத்தை பாஜகவிற்கும், அண்ணாமலைக்கும் விட்டுக் கொடுத்தார்கள். அதனால் தான் பாஜகவும், அண்ணாமலையும் அதிகப்படியான வாக்குகளைப் பெற முடிந்தது.
அதை மறைத்து அதிமுக தொண்டர்களை ஏமாற்றுவதற்காக வேலுமணியும், அண்ணாமலையும் இந்த நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். பாஜக - அதிமுக மறைமுக கூட்டணியை மீறி தான் திராவிட முன்னேற்றக் கழகமும், இந்தியா கூட்டணியும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கி என்பது அதிமுகவின் மூலம் கிடைக்கப் பெற்றதுதான்” என்றார்.