சென்னை: கடந்த 2023-24 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் வழங்குவதில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
மேலும், அது தொடர்பான புகாரில், ''353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து அனுமதி வழங்கி உள்ளது. இது போன்று 972 முழுநேர பேராசிரியர் இடங்கள் மோசடியாக நிரப்பியதை அங்கீகரித்துள்ளது. 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக் கழகங்களின் வேந்தரும், ஆளுநருமான ரவி, தலைமைச் செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது, '' அண்ணாப் பல்கலைக் கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் 52, 500 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் இணைப்புக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்போது பேராசிரியர்கள் விவரங்களை ஆய்வு செய்வோம்.
ஆசிரியர்கள் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்தோம். அப்போது தகவல்கள் சரியாக இருந்தது. அறப்போர் இயக்கம் கூறிய தகவல் அடிப்படையில் பிறந்தத் தேதியை வைத்து ஆய்வு செய்தப்போது, 52,500 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 2 ஆயிரம் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதை கண்டு பிடித்தோம். 189 ஆசிரியர்கள் பல கல்லூரியில் பணியாற்றுவதாக தவறான தகவலை அளித்துள்ளனர். அவர்கள் மீதும், அந்த கல்லூரியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணியாற்றுவதாக கணக்கு காட்டியிருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர் ஆதார் எண் மாற்றம் செய்து தந்துள்ளனர். அதை பிறந்த தேதியின் அடிப்படையில் கண்டுபிடித்தோம். மேலும், விரிவான ஆய்வும் மேற்காெள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கிய கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் விபரங்களையும் பிறந்தத் தேதியின் அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கல்வராயன் மலைப் பகுதிக்கு தமிழக முதல்வர் செல்ல வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!