சென்னை: உலகளவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகத்தின் தரத்தை அறிந்து கொண்டு வெளிநாடு சென்று மாணவர்கள் படிக்க முடியும்.
பல்வேறு தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதுடன், ஆராய்ச்சிக்கும், பேராசிரியர்கள் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கும், ஆராய்ச்சிகள், ஆசிரியர்கள் நியமனம் பாேன்றவற்றிற்கும் தரம் நிர்ணயம் செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், உலகில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் 1503 தரவரிசைப்படுத்தி (World QS ranking) தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்த தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு ஆண்டில் 383வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் 427வது இடத்திலிருந்தது. 2022ஆம் ஆண்டு 800வது இடத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு 383வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டியில், “உலகளவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. QS ரேங்கில் அண்ணா பல்கலைக்கழகம் 383வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் 427வது இடத்திலிருந்தது. 2022ஆம் ஆண்டு 800வது இடத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 7 ஐஐடிகள் முன்னிலையில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சமுதாயம் சார்ந்து கண்டுபிடிக்கப்பட்டு பேராசிரியர்கள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிகளவில் பார்த்து, பயன்படுத்தி உள்ளனர். இதனால் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்துள்ளது.
உலகளவிய தர வரிசைப்பட்டியில் மேலும் முன்னேற்றம் அடைவதற்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது, வெளிநாட்டுப் பேராசிரியர்களை நியமனம் செய்வது, ஆசிரியர்கள் பணியாளர்கள் திறனை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னிலையை பெறுவதற்காக வரும் கல்வி ஆண்டு 100 வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையங்கள் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை கிடைத்துள்ளது. சமுதாயத்திற்கு தேவையான ஆராய்ச்சிகள் அதிகளவில் செய்யப்படுகிறது. ஆராய்ச்சி மையங்களும் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளன.
உலகளாவிய தரவரிசையில் தொடர்ந்து முன்னேறி வருவது மூலம் உலகளவில் தலைசிறந்த நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் உருவெடுக்கும். 50 வது ஆண்டு நிறைவு பெறும் போது உலகளவிய தரவரிசைப் பட்டியலில் 200 இடங்களுக்குள் இருக்கும்” என தெரிவித்தார்.