சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கான மையம், கடந்த 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரியின் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் மையத்தினால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 2023-24 கல்வியாண்டில் 91 பொறியியல் கல்லூரிகளில் 680 மேற்பட்ட ஆசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்துள்ளது தெரிய வந்தது. அதேபோல, 2024-25 கல்வி ஆண்டில் 124 பொறியியல் கல்லூரிகளில் 800-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போலியாக கணக்கு காண்பித்தது தெரியவந்தது.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் அங்கீகாரம் வழங்குவதில் போலி பேராசிரியர்கள் கணக்கு காண்பித்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் வேந்தர் என்ற முறையிலும் தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஒரு பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரியில் ஒரே கல்வி ஆண்டில் பணிபுரிவதாக அங்கீகாரம் பெறுவதற்கு பெயர் அளித்திருந்தால் அதுபோன்ற கல்லூரிகள் மற்றும் பேராசிரியர் விவரங்களை கண்டுபிடித்து அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் 294 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் போலி பேராசிரியர்கள் கணக்கு காட்டியது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைவு அங்கீகாரம் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்க ஆணையர் ஆப்ரகாம், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் குமாரவேல், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் உறுப்பினராக தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உஷா நடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
தற்போது, அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கு 2023-24 ம் கல்வியாண்டில் 91 கல்லூரியிலும் 600க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், 2024-25 ம் கல்வியாண்டில் 124 பொறியியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் போலியாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை அளித்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த போது அளித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் மீண்டும் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அதன் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் குழுவினர் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு துவங்க உள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பும் எனவும் தெரிகிறது.
இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை.. நீர் திறப்பு 16,000 அடியாக உயர்வு.. 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!