சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், வளாக கல்லூரி, இணைப்பு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய வணிக மேலாண்மை சார்ந்த முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு, TANCET எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய பொறியியல் சார்ந்த முதுநிலை படிப்புகளில் சேர்வதற்குக் கடந்த ஆண்டு முதல், CEETA எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை எனும் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.
அந்த வகையில், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை வணிக மேலாண்மை படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு, ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வரை மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்றுடன் (பிப். 7) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெறும் நிலையில், டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு, பிப்ரவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. மேலும், இளநிலை படிப்புகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் இறுதி பருவ தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அதற்கான மதிப்பெண் சான்றிதழ் இல்லாமலும் விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் 9ஆம் தேதி காலையிலும், எம்.பி.ஏ., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் 9ஆம் தேதி பிற்பகலிலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாது, முதுநிலை பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த நுழைவுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் 14 நகரங்களில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: AEBAS முறையால் மருத்துவர்களின் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.. தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார்