சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தமாக 16 நபர்களை இதுவரை செம்பியம் காவல் நிலைய தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களை 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. அதன்படி, பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மூளையாக செயல்பட்டதாக பிரபல கஞ்சா வியாபாரி அஞ்சலையை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். மேலும் அஞ்சலையை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில், எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 25) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் அஞ்சலை ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
மேலும், அஞ்சலை மீது ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்காக அவரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட 12 வழக்குகள் அஞ்சலை மீது உள்ளது எனவும், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவராக இருந்துள்ளார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மே 9ஆம் தேதி பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில், அஞ்சலை மீது கந்து வட்டி கொடுத்து மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை கைது செய்யப்பட நிலையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கும் போலீசார் அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது குறித்து விசாரணை செய்த நீதிபதி, அஞ்சலைக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பாதுகாப்புடன் காவல் வாகனத்தில் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: என் கணவருக்கு பேய் பிடிச்சிடுச்சி.. மனைவியின் நாடகத்தை தெளியவைத்த பிரேதப் பரிசோதனை.. என்ன நடந்தது?