தேனி: மதுரையைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், ஆண்டிபட்டியை அடுத்துள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தில் இருக்கும் அவருக்குச் சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலைகளை செய்து வந்துள்ளார். பெட்ரோல் பங்க் வைப்பதற்கு வருவாய்த் துறையின் தடையில்லா சான்று பெற வேண்டி, சுப்பிரமணி ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்பிடம் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, தடையில்லா சான்று வழங்குவதற்கு தனக்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என சுப்பிரமணியிடம் தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு ரசாயனம் தடவிய பணத்துடன் சென்ற சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தூரத்தில் இருந்தபடி கண்காணித்துள்ளனர். பின்னர், பணத்தை தாசில்தாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாசில்தார் காதர் ஷெரிப்பை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீசார், தாசில்தார் அறைக்குள் சென்று விசாரணை நடத்தினர். இவ்வாறு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, தாசில்தார் காதர் ஷெரிப்பிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தாசில்தாரை போலீஸ் ஜிப்பில் ஏற்றிக் கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த லஞ்சப் புகார் குறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் கம்பம் மாற்றி அமைக்க லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரி.. கையும் களவுமாக சிக்கியது எப்படி? - TNEB Officer Arrested For Bribing