கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அடுத்து அமைந்துள்ள ஆவிரியூர் சிவன் கோவில் பகுதியில், பழங்கால கல்வெட்டுடன் கூடிய சதிக்கல் இருப்பதாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி தொல்லியல் துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் அந்த கல்லூரியின் மாணவர்களான மோகன்ராஜ், தனித்தமிழன், நேரு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
பாண்டியர்கள் கால கல்வெட்டுகள்: இதுகுறித்து பேசிய பேராசிரியர் ரமேஷ், "5 அடி உயரம் கொண்ட பழங்கால கற்தூண் இன்று கிடைக்கப்பட்டுள்ளது. அதில் சிற்பங்களும், கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த கல்வெட்டில், பிற்கால பாண்டிய மன்னனான வீரபாண்டியனின் 14வது ஆட்சி காலத்தில் எழுதப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது.
இதில் துலுக்கர் (துருக்கியர்) சண்டையில் அடாதெல்லா ராவுத்தர் என்பவர் இறந்ததையும் அதனால் அவருடைய மனைவி மல்லணதேவியும், இதே ஊரில் தீப்பாய்ந்து இறந்தாள் என்பதையும், இந்த சதிக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தளபதி மாலிக்காபூர், தமிழ்நாட்டின் மீது படை எடுத்து வந்தபோது, அதனை எதிர்த்து சண்டையிட்ட மாவீரன் அடாதெல்லா வீரன் இறந்ததையும், இந்த கல்வெட்டு தகவல் குறிப்பிடுகிறது.
சதிக்கல்வெட்டு துாணின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்கள் மிகவும் நேர்த்தியாக பொறிக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் அடாதெல்லா ராவுத்தர் நின்ற நிலையில், வலது கையில் நீண்ட வாளை வைத்துள்ளார். வலது புறம் அவரது மனைவி மல்லணதேவி உள்ளார். இருவருக்கும் நடுவில், சிவலிங்கம் காணப்படுகிறது. இத்துாணில் நடுகல்லும், சதிக்கல்லும் சேர்ந்தவாறு உள்ளது" என தொல்லியல் துறை பேராசிரியர் ரமேஷ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி - கார் ஷெட் - குடியிருப்பு.. திருப்பத்தூரை பரபரப்பாக்கிய சிறுத்தை பிடிபட்டது!