தஞ்சாவூர்: மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து நேற்றிரவு கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைப்பது எல்லாம் மிகச் சாதாரண பிரச்சனை, இதை நிறைவேற்றப் பலகட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை, காரணம் இவர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது.
இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிடுகிறது. இதில், பிரதமர் மோடி 3வது முறையாகப் பிரதமராவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. இந்த தேர்தலில் அதிமுக எதற்காக நிற்கிறார்கள் என தெரியவில்லை, காரணம் இவர்கள் எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணியில் இல்லை, மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆளும் கட்சியும் இல்லை. இவர்கள் கூட்டணியில் பிரதமர் யார்? இவர்களுக்கு திமுக மீது கோபம், அந்த கோபத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள், அந்த வாக்கை மாம்பழத்திற்கு அளியுங்கள், திமுக கண்டிப்பாக தோற்கடிப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.
கடந்த 57 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட திமுகவிற்கும், அதிமுகவிற்கும் முன்னேற்றம் என்றால் என்னவென்று தெரியாது. நீர் மேலாண்மை என்றால் என்னவென்று தெரியாது, வளர்ச்சி என்றால் என்னவென்று தெரியாது, நிர்வாகம் செய்யத் தெரியாது, வேலைவாய்ப்பை உருவாக்கத் தெரியாது, இவர்களிடம் எந்த விதமான தொலைநோக்கு திட்டமும் கிடையாது, இவர்களால் தமிழகத்திற்கு எந்தவிதமான முன்னேற்றமும் வரப்போவது இல்லை. இவர்களால் தாத்தா, அப்பா, மகன், பேரன் என 4 தலைமுறைகளும் மது போதைக்கு அடிமையாக்கி நாசம் செய்தது தான் இவர்களது சாதனை.
தற்போது பள்ளி, கல்லூரிகள் முன்பு அதிக அளவில் போதைப்பொருட்கள் விற்பனையாகிறது. இதனைத் தடுத்து நிறுத்த திமுகவிற்கு அக்கறையில்லை, எனவே தாய்மார்களே உங்கள் கோபத்தை வாக்குகளால் வெளிப்படுத்த இந்த தேர்தல் தான் சரியான தருணம். நமது வேட்பாளர் ம.க ஸ்டாலினை நீங்கள் பொது வேட்பாளராகப் பாருங்கள், கடந்த முறை வென்ற 38 பேரால் என்ன பயன்? இவர்கள் சாதித்து என்ன? என கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கு மரியாதை உள்ளதா? அவர்கள் கேட்ட ஒரு பொதுத் தொகுதியை திமுக வழங்க முன்வரவில்லை.
இன்று தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். அவர்களில் மூவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கான வரிசைப்படி பார்த்தால் 30வது இடத்தில் சி வி கணேசனும், 33வது இடத்தில் மதிவேந்தனும், கடைசியிடமான 34வது இடத்தில் கயல்விழி செல்வராஜியும் உள்ளனர்.
இது தான் அந்த சமுதாயத்திற்கு நீங்கள் அளிக்கும் மரியாதையா, பிறகு ஏன் நீங்கள் அவருக்கு ஓட்டுப் போடுகிறீர்கள், அவர்கள் பின்னால் போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால் எங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் போது முதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித் எழில் மலைக்கும், அடுத்து பொன்னுசாமிக்கும் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
அது மட்டுமா தற்போது, பாமக 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதில், 3 பேர் பெண்கள் என்றும், 2 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும், பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு இந்த தேர்தலில் பாமக வழங்கியுள்ளது என்றும் கூறினார். எனது நோக்கம் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் ஒரு மாற்றம் வரவேண்டும் என்பது தான்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒதுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. எனவே ம.க ஸ்டாலினுக்கு நீங்கள் அனைவரும் மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என மாம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாக்கு கேட்டு தனது உரையை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூடைப்பந்து விளையாடி வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்! - Lok Sabha Election 2024