சென்னை: மாநில மனித உரிமை ஆணைய தலைவரின் பாதுகாப்பு இரண்டு முறை வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அன்பு மணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசருமான மணிக்குமார் அவர்களின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு கடந்த 3 நாட்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருமுறை திரும்பப்பெறப்பட்டிருக்கிறது. காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் நடைபெற்று வரும் திரைமறைவு மோதலின் ஒரு கட்டமாக மனித உரிமை ஆணையத் தலைவருக்கு நெருக்கடி அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஆணையிட்டார் என்பதற்காக மாநில மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பை 3 நாட்களில் இருமுறை திரும்பப் பெற்றதும், இப்போதும் நாளை வரை மட்டுமே அவருக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டிருப்பதும் ஏற்க முடியாதவையாகும். எனவே, மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமார் அவர்களுக்கு எந்த இடையூறுமின்றி தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்,"என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்