நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சக்தி நாயக்கன் பாளையம், பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் (44). இவர், MCA படித்துவிட்டு பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரின் 10 வயது மகளை செந்தில்குமார் திடீரென கத்தியால் வெட்டியுள்ளார். அதனை அடுத்து, குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட செந்தில்குமாரின் தாயார் சம்பூர்ணம், சிறுமி தாக்கப்பட்டதைக் கண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதனை அடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் செந்தில்குமாரை பிடிக்க முயன்றபோது அவர்களையும் கத்தியால் தாக்கியுள்ளார். பின்னர், படுகாயம் அடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், செந்தில்குமாரை தடுக்க முயன்றபோது படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் செந்தில்குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படுகாயம் அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், செந்தில்குமாரை மனநோயாளி எனக்கூறி போலீசார் தப்பிக்க வைத்திருக்க முயற்சிப்பதாகவும், அவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும், அதனை பெற்றவரிடம் கூறி விடுவேன் என கூறியதால் சிறுமியை தாக்கியுள்ளதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பிரபு, "விளையாடுவதற்காகத்தான் எனது மகள் சென்றார். எனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தாரா என்று தெரியவில்லை. தடுக்க முயற்சித்தவர்களையும் தாக்கிவிட்டார். குழந்தையை கூட்டிவர சென்றபோது என்னையும் செந்தில்குமார் வெட்ட முயன்றார்" என அழுதபடி கூறினார்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், "சிறுமியை தாக்கிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் வீட்டில் இருந்த வேறுயாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவரது தாயாரையும் விசாரிக்க வேண்டும். சிறுமியை தாக்கிய நபருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இதனிடையே, சிறுமியை தாக்கிய செந்தில்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, செந்தில்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதனை அடுத்து, அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பெண் கேட்டது தப்பா..? பிரியாணி கடை ஊழியர் துடிக்க துடிக்கக் கொலை.. தருமபுரி சம்பவத்தின் பின்னணி!