திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பை எட்டி வரும் நிலையில், ஜெயக்குமாரின் வீட்டு நபர்களிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த மே 2ஆம் தேதி இரவு மாயமாகி மே 4ஆம் தேதி கரைசுத்து புதூரில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருக்கும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட சுமார் 30 பேர் விசாரணை வலையில் இருக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமார் தனக்கு மன உளைச்சல் மற்றும் ஆபத்து இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததால், முதலில் ஜெயக்குமாரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், ஜெயக்குமார் உடலை மீட்டபோது, அவரது உடலில் கை, கால்கள் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டதோடு வயிற்றில் கடப்பாக்கல் ஒன்றும் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஜெயக்குமார் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என தெரியவந்தது. அதேபோல, அவரது உடற்கூறாய்வு முடிவில் ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவும் தங்கவில்லை என கூறப்படுகிறது. பொதுவாக, ஏற்கனவே உயிரிழந்த சடலத்தை எரித்தால் மட்டுமே அது போன்று நுரையீரலில் திரவங்கள் தங்காது என மருத்துவக்குழு தெரிவித்தனர். இதன் பிறகே ஜெயக்குமாரின் மரண வழக்கு கொலை விசாரணையை நோக்கி நகர்ந்தது. தற்போது நெல்லை எஸ்பி சிலம்பரசன் மேற்பார்வையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மேலும், போலீசார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததன்படி, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், குடும்ப பிரச்சினையாகவும் இருக்கலாம் என்ற கோணத்தில், ஜெயக்குமாரின் ஊரில் முகாமிட்டு அவரது குடும்பத்தினரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரேனும் திட்டமிட்டு அவரை கொலை செய்தார்களா, ஜெயக்குமார் கடிதம் உண்மைதானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
குடும்பத்தினர் சதியா? குறிப்பாக, அவரது மகன் கருத்தையா ஜாப்ரினை தனி அறையில் வைத்து போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இந்த கொலையில் போலீசாருக்கு ஒரு சிறிய தடயம் கூட கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்ந்து நடத்திய விசாரணையில், வழக்கின் போக்கையே மாற்றும் அளவுக்கு போலீசாருக்கு முக்கிய விஷயம் தெரிய வந்துள்ளது.
மும்பை போன் கால்: அதாவது, தனிப்படை போலீசார் ஜெயக்குமாரின் மகன் ஒருவரது தொலைபேசி நம்பரை ஆய்வு செய்தபோது, ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு, தொடர்ச்சியாக மும்பையில் இருந்து போன் கால் ஒன்று ஜெயக்குமார் மகனுக்கு வந்துள்ளது. அதேபோல், ஜெயக்குமார் மகனும், அதே நம்பருக்கு தனது செல்போனில் இருந்து அடிக்கடி பேசியுள்ளார்.
எனவே, மும்பையில் இருந்து ரவுடிகள் யாரேனும் வரவழைக்கப்பட்டு ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா, அவர் மரணத்திற்கும், மும்பை போன் காலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெண்ணுடன் உறவு: மேலும், ஜெயக்குமாருக்கு வேறொரு பெண் ஒருவருடன் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அந்த பெண்ணையும் தனிப்படை போலீசார் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறனர். எனவே, பெண் விகாரத்தில் ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயக்குமாரின் உடல் தானா? டி.என்.ஏ. டெஸ்டுக்கு சென்ற மாதிரிகள்.. நீளும் மர்மம்..! - Tirunelveli Jayakumar Death Case