மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்கிழமை தோறும் பருத்தி ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில், 3-வது வாரமாக பருத்தி மறைமுக ஏலம் இன்று (ஜூலை 2) நடைபெற்றது.
இந்த மறைமுக ஏலத்தில் சுமார் 1,216 விவசாயிகள் எடுத்து வந்த 4,200 குவிண்டால் பருத்தியை ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மற்றும் தேனி, கொங்கணாபுரம், ஆத்தூர், கோவை, பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், மயிலாடுதுறை மாவட்ட உள்ளூர் வியாபாரிகள் ஆகியோர் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப மறைமுக ஏலத்தில் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்தனர்.
பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7,809 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 7,000 ரூபாய்க்கும், சராசரியாக 7,400 ரூபாய்க்கும் விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கு முன்னதாக, இந்த பருத்தி ஏலத்தின் போது அதிகவிலை நிர்ணயம் செய்த வெளிமாநில வியாபாரியிடம் உள்ளூர் வியாபாரி கலியமூர்த்தி என்பவர் அதிக விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று கூறி, வெளிமாநில வியாபாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த பாண்டியன் என்ற விவசாயி, உள்ளூர் வியாபாரி கலியமூர்த்தியிடம் நியாயத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு பாண்டியன் என்ற விவசாயியை வியாபாரி கலியமூர்த்தி தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக வியாபாரி கலியமூர்த்தியை விவசாயிகள் அனைவரும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, உள்ளூர் வியாபாரி கலியமூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் அனைவரும் கையெழுத்திட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூட உயரதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக பணம் கொடுத்து பஞ்சு வாங்க நினைக்கின்றனர்.
ஆனால், உள்ளூர் வியாபாரியான கலியமூர்த்தி என்பவர், வெளிமாநில வியாபாரிகளை அதிக விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுக்கிறார். இதனை தட்டிக்கேட்கும் விவசாயிகளையும் மிரட்டுகிறார். எங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தடுக்கும் உள்ளூர் வியாபாரி கலியமூர்த்தியின் உரிமத்தை ரத்து செய்து அவர் மீது உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிகை விடுத்தனர்.
இதையும் படிங்க: பெருங்களத்தூரில் இரட்டைக் கொலை.. கழுத்தறுத்து சுடுகாட்டில் வீடிய கொடூரம்..! அதிர்ச்சி பின்னணி