சென்னை: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேட்பாளர்கள் அறிவிப்பு, பரப்புரை பணிகள், வாக்கு சேகரிப்பு எனத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த நிலையில், தீவிர பரப்புரையிலும் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் அமமுகவிற்கு தேனி, திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது, அந்த தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடவுள்ள இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் திருக்கோயிலுக்கு வருகை தந்த டிடிவி தினகரன், அங்கு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் ஆகிய தானும், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருச்சி தொகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் போட்டி! - Sasikanth Senthil