சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இந்த திட்டம் மக்களிடம் மகத்தான வரவேற்பை இன்று வரை பெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டு 127 அம்மா உணவகங்களாக தொடங்கப்பட்டது. தற்போது 396 அம்மா உணவகங்களாக அதிகரித்து செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் தொடங்கும் பொழுது, புதிய கட்டிடம் மற்றும் பயன்பாடு இல்லாத கட்டிடங்களை சீர் செய்து அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மா உணவகங்களில் அடிப்படை கட்டமைப்புகள் சரிவர இல்லை என மாமன்ற உறுப்பினர்கள் மாமன்றக் கூட்டம் வாயிலாகவும், சுகாதார நிலைக்குழு கூட்டங்களின் வாயிலாகவும் பல்வேறு புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா உணவங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தப்படுவதாக மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சென்னை மாநகராட்சியில் இயங்கும் அம்மா உணவகங்களை ஆய்வு செய்த போது, அம்மா உணவகங்களில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள், உணவு அருந்தும் இடங்கள் பழுதடைந்தும், குடிநீர் இணைப்பு சரியாக இல்லாமல் இருப்பதும், கட்டிடங்கள் விரிசல் அடைந்து இருப்பதை சரிசெய்யவும் சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், 5 கோடி ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த விரிசல் உள்ள அம்மா உணவகங்களின் கட்டிடங்களை சரி செய்து புதிய வண்ணம் பூசி பராமரிக்கப்பட உள்ளது.
மேலும், கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டிடப் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்துறை சம்பந்தப்பட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அம்மா உணவக சமையலறைக்குத் தேவையான மிக்சி, கிரைண்டர் பழுதடைந்த இயந்திரங்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் உடனடியாக பெற்றுக்கொள்ள மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.