சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் சென்னையில் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டைவணையை அடுத்த மாதம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சென்னையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளனர். இதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், வருமான வரித் துறை, புலனாய்வுத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க : "தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு" - சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் உறுதி!