புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கீழையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி அமைத்த சாலையை எடுக்கக்கோரி, கீழையூர் பகுதியை சேர்ந்த ஆதி திராவிட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “1989-ஆம் ஆண்டு புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே கீழையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதிதிராவிடர் குடியிருக்கும் பகுதியில், அம்மக்களின் அனுமதியின்றி மேல் வகுப்பினரின் அழுத்தத்தினால், அரசு அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் கடந்த 1ஆம் தேதி சாலை அமைக்க வந்துள்ளனர்.
அப்போது ஆதி திராவிட மக்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினரின் உதவியுடன் சாலை போடப்பட்டுள்ளது. அந்த சாலையில் மேல் வகுப்பினர் இறந்தவர்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தும் சமயத்தில், அத்துமீறி செயல்படுகின்றனர். இதனால் சாதி பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது. எனவே, அந்த சாலையை மாற்றி அமைக்க வேண்டும். மேலும், ஆதி திராவிட மக்கள் பயன்படுத்த கொடுத்த இடத்திற்கு, தகுதி வாய்ந்த 22 பேருக்கு பட்டா வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீர்காழி அருகே போலி பதிவு எண் கொண்ட காரில் வலம் வந்த கும்பல்.. சதி திட்டமா? கூலிப்படை? - போலீஸ் விசாரணை!
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து பேசியதாவது, “கீழையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில், அனுமதியின்றி அதிகாரிகள் அடக்கு முறையை கையாண்டு சாலையை அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை காவல்துறையைக் கொண்டு கைது செய்து, இரவோடு இரவாக சாலை அமைத்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த சாலையை உடனடியாக அகற்ற வேண்டும். அடக்கு முறையில் ஈடுபட்ட தாசில்தாரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
வேங்கைவயல் விவகாரம்: வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது. இதில், அரசியல் கட்சியினர் அமைதி காப்பதும் வெட்கக்கேடானது. வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தில் கால அவகாசம் மட்டும் பெற்று வருகின்றனர். நீதிமன்றமும் கால அவகாசம் கொடுத்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வேங்கைவயல் வழக்கு தாமதமாவதற்கு அரசியல் தலையீடே காரணம். இந்த வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறது திராவிட மாடல் அரசு. குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருப்பது அரசின் தோல்வியை காண்பிக்கிறது. எனவே, காவல் துறையும் அரசும் பதவி விலக வேண்டும். புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டு கொள்ளாமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது” இவ்வாரு தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்