புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அம்பேத்கர் மக்கள் இயக்க பொதுக்குழு கூட்டம், அதன் செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. இதில், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவராக செயல்பட்டு வந்த இளமுருகு முத்து, தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இக்குழுக்கூட்டத்தில், தீண்டாமை வன்கொடுமைகளை விசாரிப்பதற்கு மாவட்டந்தோறும் தனிக் காவல் நிலையம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்துதல், தமிழக அரசு சார்பில் இந்தியாவில் மிக உயரமான அம்பேத்கர் சிலையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் இளமுருகு முத்து, “வேங்கைவயல் சம்பவத்தைவிட மனித உரிமை மீறல்கள் போர்க்களங்களில் அதிகளவு நடைபெறுகிறது. இனிவரும் காலங்களில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கேள்வி கேட்பதற்கு ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காக, வேங்கைவயல் சம்பவத்தை ஐநா சபையில் முன்வைத்தேன்.
பெரியார் மண், சமூக நீதியின் தலைநகரம், சமூக நீதி காவலர்கள், திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் தமிழக மண்ணில்தான் உலகத்தில் நடக்காத அநாகரீகத்தின் உச்சகட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாடு என்பது புண்ணிய பூமி கிடையாது. இங்கு களைய வேண்டிய செயல்கள் நிறைய உள்ளது. இதை அரசுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக வேங்கைவயல் சம்பவம் ஐநா வரை கொண்டு செல்லப்பட்டது.
வேங்கைவயல் சம்பவம் நடந்து 15 மாதங்கள் கடந்த நிலையில், ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை. இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தமிழக அரசு கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதில் நீதி கிடைக்குமா? என்பது எனக்கு கேள்விக்குறியாக உள்ளது.
சென்னை, பள்ளிக்கரணையில் ஆணவக் கொலை நடந்துள்ளது. ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கின்றது. போதை கலாசாரம் தமிழகத்தில் ஊடுருவினால் சமூகம் வீணாகிப் போய்விடும். போதைப்பொருட்கள் விவகாரத்தில் தமிழக அரசு பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், 'தமிழகம் முழுவதும் பல இடங்களில், சமூகத்திற்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகளவு நடைபெற்று வருகிறது. வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. இதில் தமிழக அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டும், வேங்கைவயல் போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும்.
வேங்கைவயல் வழக்கில் தமிழக காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. வேங்கைவயல் சம்பவ வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை யாரோ தப்பிக்க வைக்கின்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் புதிய வருவாய் வட்டமாக திருவோணம் உதயம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!