கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவது குறித்து அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் மாற்றுக் கட்சியினர் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜவில் இணைந்துள்ளார்கள் என்றால், அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக இருந்து இருப்பார்கள். தமிழகத்தில் இருக்கின்ற கட்சிகளில் மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான். தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது.
அதிமுக தலைமையின் கீழ் கூட்டணி அமைய வேண்டும், அது தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் எங்கள் தலைமையின் கீழ் வருகின்ற கட்சிகளைச் சேர்த்துக் கொள்வோம். கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் மெகா கூட்டணி விரைவில் அமையும், அது குறித்தன அறிவிப்புகளை விரைவில் ஊடகத்தின் வாயிலாகத் தெரிவிப்போம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழலை பாதுகாக்க களத்தில் இறங்கிய மதுரை காமராசர் பல்கலை காட்சித் தொடர்பியல் துறையினர்!