தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், மேற்குத் தொடர்ந்து மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணைப் பகுதியில் கனமழை பெய்தது. அதனால், வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 3 நாட்களாக வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, 2 நாட்களாக யானையின் நடமாட்டம் காரணமாக என மொத்தம் 5 நாட்கள் குளிக்கத் தடை நீடித்தது.
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அருவி பகுதியில் மழை பொழிவு குறைந்து பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு நீர் வரத்து சீரானதாலும், யானையின் நடமாட்டம் இல்லாததாலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சுமார் ஐந்து நாட்களுக்குப் பின்பு குளிப்பதற்கு அனுமதி அளித்ததாலும், விடுமுறை நாள் என்பதாலும் சுருளி அருவியில் கொட்டும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் புதிதாக 100 தாழ்தளப் பேருந்து சேவை; இவ்வளவு சிறப்பம்சங்களா?