திருச்சி: இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதி மணிக்கு ஆதரவாகப் பிரச்சாரக் கூட்டம் மணப்பாறை ரவுண்டானா பகுதியில் நேற்றிரவு(ஏப்.6) நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், "நாடு விடுதலை பெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே ஏற்றத்தாழ்வு இல்லாமல் பாகுபாடில்லாமல் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று வழங்கப்பட்டது. நமது நாடு விடுதலை பெற்ற பிறகு நமது நாட்டை நாம் ஆண்டு கொள்வதற்கு நமக்கான சட்டங்களை நாமே உருவாக்கிக் கொண்டோம் அதுதான் அரசியலமைப்பு சட்டம்.
அந்த அரசியலமைப்பு சட்டம் தான் நாட்டை வழி நடத்துகிறது. அரசியலமைப்புச் சட்டம் பல அமைப்புகளை உருவாக்கி இருக்கிறது. நாடு செம்மையாக நேர்த்தியாகச் செயல்படுவதற்குப் பல அமைப்புகளை அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியிருக்கிறது.
அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை உருவாக்கியது பிரதமர் மோடியோ, ஜவஹர்லால் நேருவோ கிடையாது. அரசியலமைப்பு சட்டம் அந்த அமைப்பை உருவாக்கித் தந்திருக்கிறது, அது சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்பு.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்றார். அவர்களுக்கு இந்த முறைப் பானை சின்னம் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்படுகிறது. அதை நீதிமன்றம் வரை சென்று பெற்று வந்திருக்கிறார்.
அதேபோல் இந்த பானை சின்னத்தை நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேச்சைக்கு வழங்கப்பட்டிருக்கிறது இது என்ன தேர்தல் ஆணையம் என்று தெரியவில்லை. அதேபோல நம்மைக் கடுமையாகத் தாக்கி பேசக்கூடிய நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்படுகிறது.
அவர்களுக்கு மறுக்கப்பட்ட அந்த சின்னம் ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர் செல்வங்களில் ஒருவருக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படுகிறது. அது என்ன சுயேச்சை சின்னமா? இப்படிச் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் மீது எப்படி நம்பகத்தன்மை வரும்.
அமலாக்கத்துறை என்ன மோடி வளர்த்திருக்கும் நாயா? வருமானவரித்துறையும், அமலாக்கத்துளையும் மோடியால் ஏவி விடப்படும் நாய்க்குட்டிகளா? அதென்ன எதிர்க்கட்சிகளின் மீது மட்டுமே பாய்ந்து கொண்டிருக்கிறது?எதிர்க்கட்சிகளை மட்டுமே கடித்துக் குதறுகின்றது? இந்தத் துறைகள் அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட துறைகள். அவ்வாறு உருவாக்கப்பட்ட துறைகள் நேர்மையாகச் செயல்பட வேண்டாமா?அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டார்கள், காலில் போட்டு மிதிப்பார்கள், அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளைச் சீர்குலைப்பார்கள், அதைத்தான் ஜனநாயக விரோத செயல் என்று சொல்கிறோம்" என பேசினார்.
கூட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணி வருகை தராததால், அக்கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதேபோல் திமுக சார்பில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில் உறுப்பினர்கள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் கூட்ட அரங்கில் பாதிக்குப் பாதியாக சேர்கள் காலியாக கிடந்தன.
இதையும் படிங்க: சென்னை மெட்ரோவிற்கு விஸ்வகர்மா விருது.. எதற்காக தெரியுமா? - Chennai Metro Receives Award