தூத்துக்குடி: தமிழகத்தின் கடலோர பகுதிகளில் உள்ள கனிம வளங்களை மத்திய அரசு இதுவரை நிறுவனம் மூலம் எடுத்தது. ஆனால், தற்போது பெரியளவில் எடுக்க நினைத்தே கன்னியாகுமரியில் கனிம சுரங்கத்தை அமைக்க உள்ளது. இதனால், கடலோரஹ பகுதிகளில் வசிக்கும் மீன்வர்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகப்படுவார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் டிஎஸ்எஸ் மணி வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அன்டன் கோமஸ் மற்றும் மூத்த பத்திரிகையாளர் டிஎஸ்எஸ் மணி ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அன்டன் கோமஸ் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கடலோர பகுதிகள் என மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி மற்றும் மீனவர்கள் வார்டு உறுப்பினராக உள்ள பகுதிகளில் உள்ளாட்சிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தமிழக அரசு மீனவர்கள் உள்ளாட்சி உறுப்பினராக முடியாத அளவுக்கு சதி நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு, மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கடலோர பஞ்சாயத்து முறையை கொண்டு வர வேண்டும்.
அதேபோன்று, மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான தேர்மாறன் பாண்டியாபதி பெயரை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு வைக்க வேண்டும். முயல் தீவில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுகொள்கிறேன்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள கனிம சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த திட்டம் மூலம் தென் தமிழக மாவட்டங்கள் பெரும் பாதிப்பை அடையும். 11.44 சதுர கிலோமீட்டர், 30 அடி ஆழத்தில் இந்த சுரங்கம் வெட்டப்பட உள்ளது. இந்த திட்டம் கொண்டு வரும்பட்சத்தில் கதிரியக்கம் ஏற்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் - நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர்!
இதையடுத்து பேசிய மூத்த பத்திரிகையாளர் டிஎஸ்எஸ் மணி, “தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளாகவே மத்திய அரசு 'இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்’ என்னும் நிறுவனம் மூலம் கனிம வளங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால், தற்போது அதை பெரியளவில் செய்வதற்காக திட்டங்களுடன் தமிழகம் வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து தான் எதிர்ப்பு கூட்டமைப்புகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு மதுரையில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல் கன்னியாகுமரியில் அமையவிருக்கும் கனிம சுரங்கத்திற்கும் மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.