கும்பகோணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி வீட்டின், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கும்பகோணம் வந்தார்.
பின்னர், அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டுக் கால பாஜக அரசு, கடந்த இரு பொதுத்தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
குறிப்பாக, ஆண்டிற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணம் மீட்பு, இந்தியர்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவது, விலைவாசியைக் குறைப்பது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்பதனை குறிப்பிடலாம். மோடி தனது தோல்வியை மூடி மறைக்க, ராமரைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என பகல் கனவு காண்கிறார்.
கடவுளை ஏற்பதும், ஏற்காததும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம், இதனை, வலுக்கட்டாயமாக யாரும் திணிக்கக் கூடாது. மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி என்பது சர்வாதிகார ஆட்சி, பாசிஸ்ட் ஆட்சி இவர்கள் ராமர், சீதையைக் காட்டி வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்திய (I.N.D.I.A) கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இராமாயணம் ஒரு கதை, மகாபாரதம் ஒரு கதை, கதையில் வரும் கதாநாயகர்கள் எல்லாம் கடவுளாக முடியாது. அப்படி என்றால் எம்ஜிஆர், சிவாஜி இன்னும் பலர் கடவுளாகியிருப்பார்கள். அது போலவே தான் நாட்டை ஆண்ட மன்னர்களும், கடவுள்கள் அல்ல அவர்களுக்கும் கோயில் கிடையாது. உலகை வியந்து பார்க்க வைத்த தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனுக்குக் கூட கோயிலுக்குள் அவரது சிலை வைக்க அனுமதியில்லாமல், கோயில் முன்புள்ள வீதியில் தான் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
பாஜக நேர்மையாக இந்த தேர்தலைச் சந்திக்க விரும்பினால், அவர்கள் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியவை குறித்த பட்டியலை வெளியிட்டு அதனை வைத்து மக்களிடம் வாக்குகள் கேட்கட்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான நபராக ஏற்றுள்ள பொறுப்பிற்குக் களங்கம் ஏற்படுத்துபவராகச் செயல்படுகிறார். இந்திய விடுதலையில் காந்தி குறித்து தற்போது தவறாக விமர்சித்திருப்பது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குடியரசு தினவிழாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனிப்பட்ட முறையில் கொண்டாடினாலும், தமிழக ஆளுநரின் அழைப்பை நிராகரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்கிறது. தமிழக ஆளுநராக நியமித்த குடியரசுத் தலைவரே அவரை சென்னை கீழ்பாக்க மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்த்து சிகிச்சை அளித்துக் குணமடையச் செய்ய வேண்டும். அண்ணாமலை தொடர்ந்து, பக்குவப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது, செய்தியாளர்களின் கேள்வி எப்படி இருந்தாலும், அதற்குரிய முறையில் விளக்கம் அளிப்பது தான் கடமை, அதைத் தவிர்த்து, செய்தியாளர்களை நீ, நான், வா, போ என ஒருமையில் பேசுவதும், திட்டுவதும் அவரின் மன பக்குவமின்மையைத் தான் காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் விஜய்? - ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?