சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் பிற்பகலிலும் திடீரென இடி மின்னல் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்தது. அந்த வகையில், சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கனமழை பெய்ததால், இரண்டாவது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, திருவனந்தபுரத்திலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு 136 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு 147 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 188 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திருச்சியிலிருந்து 72 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏரோலின் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலே வட்டம் அடித்து பறந்து கொண்டிருந்தன.
பின்னர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் வானில் பறந்து கொண்டிருக்கும் நான்கு விமானங்களையும் கண்காணித்து தகவல்கள் பரிமாறிக் கொண்டனர். சென்னையில் தொடர்ந்து வானிலை மோசமடைந்து கொண்டிருந்தால், பெங்களூர் விமான நிலையத்திற்கு இந்த விமானங்களை திருப்பி அனுப்பவதற்கான ஏற்பாடுகளும் செய்வதாக தகவல் வெளியாகின.
இதற்கிடையே, சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களான புனே, கொல்கத்தா, ராஜமுந்திரி, மும்பை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட ஆறு விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து புறப்பட தாமதமாகி உள்ள விமானங்களும் புறப்பட்டுச் செல்லும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - Air Canada Bomb Threat