சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திருநாள் வரும் 31ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், தீபாவளியை சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விமானங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால், சென்னை விமான நிலையத்தில் குறிப்பாக உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
அதன் எதிரொலியாக, இன்று (அக்.29) முதல் சென்னை விமான உள்நாட்டு விமான நிலையத்தில், தமிழ்நாட்டிற்குள் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பெருநகரங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அதேபோல், வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணங்களும் அதிகரித்துள்ளது.
விமான கட்டண விவரம்:
வ.எண் | வழித்தடம் | சாதாரண நாட்கள் (ரூ) | உயர்வு (ரூ) |
1. | சென்னை - தூத்துக்குடி | ரூ.4,109 | ரூ.8,976 - 13,317 |
2. | சென்னை - மதுரை | ரூ.4,300 | ரூ.11,749 - 17,745 |
3. | சென்னை - திருச்சி | ரூ.2,382 | ரூ.8,211 - 10,556 |
4. | சென்னை - கோவை | ரூ.3,474 | ரூ.7,872 - 13,428 |
5. | சென்னை - சேலம் | ரூ.3,300 | ரூ.8,353 - 10,867 |
6. | சென்னை - டெல்லி | ரூ.5,475 | ரூ.5,802 - 6,877 |
7. | சென்னை - கொல்கத்தா | ரூ.4,599 | ரூ.11,296 - 13,150 |
8. | சென்னை - ஹைதராபாத் | ரூ.2,813 | ரூ.3,535 - 7,974 |
9. | சென்னை - அந்தமான் | ரூ.5,479 | ரூ.9,897 - 10,753 |
10. | சென்னை - திருவனந்தபுரம் | ரூ.3,477 | ரூ.6,185 - 18,501 |
11. | சென்னை - கொச்சி | ரூ.2,592 | ரூ.4,625 - 6,510 |
மேற்குறிப்பிட்டுள்ள இந்த கட்டணங்கள் அனைத்தும், இன்றைக்கான கட்டணங்கள் ஆகும். ஆனால், நாளை புதன்கிழமை, தீபாவளிக்கு முன்தினம் என்பதால், விமானக் கட்டணங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தில், பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வையும் பொருட்படுத்தாமல், போட்டி போட்டுக் கொண்டு, விமான டிக்கெட்டுகள் எடுத்து, விமானங்களில் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமானத்தில் வெடிகுண்டு?.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!